தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு! சேவல் சண்டை வரலாறு அறிவோமா?

இந்தியாவில் சேவல் சண்டை கிமு 2500 வருடங்களுக்கு முன்பே நடைபெற்றதாக சிந்து சமவெளி நாகரிகம் கூறுகிறது.
Kodi panthem and Sevak kattu
Adukalam and Seval sandai Image credit:Sun pictures and AI
Updated on

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு , ரேக்ளா ரேஸ், மஞ்சு விரட்டு போன்றவை இருந்தாலும் கிராமங்களைத் தாண்டி, இன்று நகர்புறங்களிலும் ஏதேனும் ஒரு ஓரத்தில் சேவல் சண்டை நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. சேவல் சண்டை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்குப் பகுதியில் பரவலாக வார இறுதிகளில் நடைபெறுகிறது.

இது தமிழகம் தாண்டி , ஆந்திரா , தெலுங்கானா , கர்நாடகா , மகாராஷ்டிரா, வங்காளப் பகுதிகளிலும் பரவி உள்ளது. அரிதாக ஒரு சில வட இந்தியப் பகுதிகளிலும் இதைக் காண முடியும். பொங்கல் பண்டிகை காலங்களிலும் திருவிழா காலங்களிலும் சேவல் சண்டை நடத்துவது பாரம்பரியமாக இருக்கிறது. இதன் மரபியலை ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் சிறிது அறிந்து கொள்ளலாம்.

சேவல் சண்டை வரலாறு:

பண்டைய தமிழகத்தில் அண்டை நாட்டு போர் இடைவேளைகளிலும் , போர் முடிந்து அங்கேயே காவலுக்கு தங்கும் வீரர்கள் தங்களின் பொழுது போக்கிற்காக சேவல் சண்டையை விளையாடி உள்ளனர். சேவல் சண்டை என்பது இரண்டு பயிற்சி பெற்ற சேவல்களை ஒன்றோடு ஒன்று மோத விட்டு ரசிப்பது. பல ஆயிரம் ஆண்டுகளாக இது ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு விளையாட்டாக உள்ளது. இதற்காக சேவலுக்கு நல்ல ஊட்டமிக்க உணவுகளை கொடுத்து தினசரி பயிற்சியும் கொடுத்து வளர்ப்பார்கள்.

இதற்காக சேவலின் கால் நகங்கள், அலகு போன்றவை கூர்மையாக்கப்படும். தற்போதைய காலத்தில் சேவலின் நகங்களில் சிறிய ரக கத்திகளை சேர்த்துக் கட்டுகின்றனர். இது சில சமயங்களில் பார்வையாளர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துள்ளது. சேவல் சண்டையை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களான பட்டினப்பாலை மற்றும் திருமுருகாற்றுப்படை ஆகியவற்றிலும் காணப்படுகிறது. இந்தியாவில் சேவல் சண்டை கிமு 2500 வருடங்களுக்கு முன்பே நடைபெற்றதாக சிந்து சமவெளி நாகரிகம் கூறுகிறது.

சேவல் சண்டை தென்கிழக்காசிய நாடுகளில் பரவல்:

சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் படையெடுப்பின் போது பல நாடுகளுக்கும் இந்த விளையாட்டு பரவியது. குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா ,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் தற்போதும் விளையாடப்பட்டு வருகிறது. இந்த நாடுகளில் சேவல் சண்டை என்பது அவர்களின் பாரம்பரியம் மற்றும் மத அடையாளமாக விளங்குகிறது.

பாலி தீவில் உள்ள இந்து கோயில் பண்டிகையின் போது சேவல் சண்டை 'சாபோங்' என்ற பெயரில் பாரம்பரிய விளையாட்டாக நடத்தப்படுகிறது. இது ஒரு ஆன்மீக சடங்காகவும் அந்த நாடுகளில் உள்ளது. இந்தியாவிலிருந்து சேவல் சண்டை வாணிபம் செய்பவர்களின் வழியாக சீனா , பர்மா ,பாகிஸ்தான், ஈரான் , கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு பரவியது. கிரேக்க நாட்டில் கிமு 6 நூற்றாண்டில் சேவல் சண்டை நடந்தது பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன.

ஆந்திராவில் அதிக முக்கியத்துவம்:

ஆந்திராவில் கோடி பந்தேம்(கோழி பந்தயம்) என்று அழைக்கப்படும் சேவல் சண்டைக்கு முக்கியத்துவம் மிக அதிகமாக உள்ளது, அங்கு கிபி 1178-1182 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்நாடு போரின் தொடக்கத்திற்கு சேவல் சண்டை ஒரு காரணமாக இருந்துள்ளது. இரு அரச குடும்பத்திற்கு இடையேயான சேவல் சண்டையில் ஏற்பட்ட தன்மான பிரச்சனை போருக்கு வழிவகுத்துள்ளது. கிழக்கு சீமையிலே என்ற தமிழ் திரைப்படத்தில் பாசம் மிகுந்த அண்ணன் – தங்கை குடும்பத்தினர் ஒரு சேவல் சண்டையின் முடிவில் பிரிந்து போய் இறுதி வரை பகையுடன் இருப்பார்கள்.

சேவல் சண்டைக்கான மரபியல் அகராதி:

தெலுங்கர்கள் சேவல் சண்டையில் ஒரு படி மேலே சென்று 'குக்குட சாஸ்திரம்' என்ற பெயரில், சேவல் சண்டைக்கான அகராதி மற்றும் வழிமுறைகளை எழுதி வைத்திருந்தனர். இதன் மூலம் ஆந்திராவில் சேவல் சண்டையின் மீதான மதிப்பை உணர்ந்து கொள்ளலாம். இன்றும் கூட ஆந்திராவில் சேவல் சண்டை , சங்கராந்தி தினங்களில் பரம்பரியமாகவும், மற்ற நாட்களில் தங்களின் செல்வாக்கை நிரூபிப்பதற்காகவும் நடத்தப்படுகிறது

சேவல் சண்டை மீதான தடை:

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சேவல் சண்டை குறிப்பிட்ட காலம் வரை தடை செய்யப் பட்டிருந்தது. ஆனால் , அதே காலக்கட்டத்தில் பிரிட்டனில் சேவல் சண்டை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய விடுதலைக்கு பின்னர் தடை இல்லாவிட்டாலும், 1960 ஆம் ஆண்டு விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, இந்தியாவில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது அரசு மற்றும் காவல்துறை அனுமதியுடன் பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆன்மீக நிகழ்வை ஒட்டி சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com