நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லக்னோ, பெங்களூரூ அணிகள் மோதிய ஆட்டம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் முடிவடைந்தது. பெங்களுரூ அணி முதலில் பேட்டிங் செய்து 126 ரன்கள் எடுத்தது. மிகவும் எளிதான இந்த இலக்கை எட்ட முடியாமல் லக்னோ அணி வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. மேலும் இந்த ஆட்டத்தின் முடிவில் விராட் கோலியும், கம்பீரும் நேருக்கு நேர் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டம் முடிந்ததும் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கும் போது, நவீன் உல் ஹக் விராட் கோலியிடம் ஏதோ பேசி உள்ளார். அவருக்கு விராட் கோலி பதில் கொடுக்க, இந்த சண்டை தொடங்கியது. அதன் பிறகு கெயில் மேயர்ஸ் விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததை கண்ட கம்பீர் அவரை அழைத்துச் சென்றார். இதனால் மிகவும் கோபப்பட்ட விராட் கோலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதையடுத்து இருவருக்கும் மோதல் வெடித்தது. அப்போது உடன் இருந்த சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர். இந்த சண்டை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, இது ஐபிஎல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு முரனானது என்று விராட் கோலியும், கம்பீரும் தங்களது தவறை ஒப்புக் கொண்டனர். இதனால் விராட் கோலிக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து நூறு சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், கம்பீருக்கும் போட்டிக்கான ஊதியத்திலிருந்து நூறு சதவிகிதம் அபராதமும், நவீன் உல் ஹக்குக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 50 சதவிகிமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலி நேற்று செய்த தவறால் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாயை அபராதமாகக் கட்ட நேரிட்டு இருக்கிறடு. கம்பீர் 25 லட்சமும், நவீன் உல் ஹக்கின் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் அவர் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை அபாரமாக செலுத்த நேரிடும்.
விராட் கோலி ஏற்கெனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது தகாத வார்த்தையில் திட்டியதற்காக அபராதம் கட்டியிருக்கிறார். இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய விளையாட்டு வீரர்களே அவர்களுக்கு தவறான வழிகாட்டிகளாக இருப்பதாக விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.