1 ball 286 runs history
1 ball 286 runs history

என்னது! ஒரே பந்தில் 286 ரன் எடுத்த கிரிக்கெட் வீரர்கள்! கதையா? உண்மையா?

கிரிக்கெட்டில் ஒரு பந்தில் 16 ரன்கள், 20 ரன்கள் எடுத்தால் உலக சாதனைப் பட்டியலில் எந்த இடத்தில் வரும் என்று உற்சாகமாக கணக்கிடுவோம். ஆனால் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்தார்கள் என்றால் நம்புவீர்களா? இது கதையா? உண்மையா? என்று கேட்டால், இது நிச்சயம் ஒரு உண்மை கதைதான்.

ஆனால் இந்த செய்தி வெளியில் வந்து உலகத்திற்கு தெரிய வந்தது 1894ம் ஆண்டு ‘The pall mall gazette’ என்ற விளையாட்டு செய்தி பத்திரிக்கையின் மூலம் தான். ஆனால் இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் 1890ம் ஆண்டே நடந்துவிட்டது. என்னத்தான் கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுப்பிடித்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து வரும் அணியாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பன்பர்ரி என்ற இடத்தில் விக்டோரியன் அணிக்கும் அதன் பக்கத்து ஊரில் உள்ள ஸ்கிராட்ச் அணிக்கும் இடையே ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஸ்கிராட்ச் அணியின் முதல் பந்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் பந்தை தூக்கி வானத்தைப் பார்த்து வீசினார். அது அந்த மைதானத்தில் இருந்த ஒரு பெரிய ஜார்ரா மரத்தின் மேல் கிளையில் சென்று விழுந்தது.

ஸ்கிராட்ச் அணி அம்பையரிடம் இதனை கடைசி பந்தாக அறிவிக்க வேண்டுமென்று வற்புருத்தியது. ஆனால் அந்த பந்து அம்பையரின் கண்களுக்கு தெரியும் வகையில் மரத்தின் மேல் இருந்ததால் இது கடைசி பால் இல்லை என்று கூறிவிட்டனர். அப்போது ஒரு பாலுக்கு 4 ரன்கள் தான் எடுக்க வேண்டுமென்று எந்த விதிமுறைகளும் இல்லை.

ஆகையால் களத்திலிருந்த விக்டோரியா அணி வீரர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். இருவரும் கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் அளவு ஓடினார்கள். மரத்தில் ஏறி பந்தை எடுக்க முடியாமல், துப்பாக்கியால் சுட்டு கீழே விழ வைத்தது, ஸ்கிராட்ச் அணி. அதனை எடுத்து ஸ்டம்பில் அடிக்கும் முன்னர் விக்டோரியா அணி 286 ரன்களை எடுத்துவிட்டது. இதனால் விக்டோரியா அணி அப்போட்டியில் வெற்றிப்பெற்றது.

இது ஒரு விதத்தில் சாதனையாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் ஆஸ்திரேலியாவின் “Fairy tale” என்றும் கூறுகிறார்கள். மேலும் இதுதான் கிரிக்கெட் சரித்திரத்தில் ஒரே பாலில் அதிகம் எடுக்கப்பட்ட ரன்கள் என்று கூறப்படுகிறது. இப்போது இருக்கும் விதிமுறைகளில் இவ்வளவு ரன்கள் எடுப்பது என்பதும் முடியாத காரியமே.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com