உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதில் அஸ்வின்!

Ravichandran Ashwin
Ravichandran Ashwin
Published on

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அக்ஸர் படேலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் சேர்க்கப்பட்டதை அடுத்து அஸ்வின் இந்திய அணியுடன் குவாஹாட்டி சென்றுள்ளார். அங்கு நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியுடன் பயிற்சிப் போட்டியில் நாளை (சனிக்கிழமை) இந்தியா விளையாடுகிறது.

2018 ஆம் ஆண்டிலிருந்து அஸ்வின் இதுவரை நான்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். எனினும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளதை அடுத்து அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் தொடக்கத்தில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் மற்றும குல்தீப் யாதவ் ஆகிய மூன்று பந்து வீச்சாளர்களே இடம்பெற்று வந்தனர். ஆஃப் ஸ்பின்னர் எவரும் அணியில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் இப்போது அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொஹாலி மற்றும் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் அஸ்வின் பங்கேற்று நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனினும் மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

ராஜ்கோட்டில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இடம்பெறுவது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் அக்ஸர் படேலுக்கு பதிலாக அஸ்வின் அணியில் இடம்பெறலாம் என பேசப்பட்டு வந்தது.

18 மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அஸ்வின் இடம்பெற்றார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பைக்கான போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடிய போது அக்ஸர் படேல் கையில் காயமடைந்தார். இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அக்ஸர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அக்ஸருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்ப்பதா அல்லது அஸ்வினை சேர்ப்பதா என்ற நிலையில் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com