கிரிக்கெட்டில் இப்படியும் ஒரு கோப்பையா? இதுதான் முதல் முறை!

NZ vs ENG
Trophy
Published on

கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரும் வெற்றி, உலகளவில் இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களால் தான் சாத்தியமாகிறது. இருநாடுகளுகளுக்கு இடையிலான சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஐசிசி தொடர்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. இது போதாதென்று டி20 லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டுகின்றன. இப்படி கிரிக்கெட்டின் வளர்ச்சி அடுத்தடுத்த நிலைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், தற்போது ஒரு புதுவிதமான கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கோப்பையின் தனிச்சிறப்பு என்ன? எந்தெந்த நாட்டுக்கிடையிலான தொடர் இது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா! வாங்க இப்போதே தெரிந்து கொள்வோம்.

பொதுவாக இரு நாடுகளுக்கு இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு தொடருக்கும் ஒரு பெயர் இருக்கும். இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு பெரும்பாலும் விளம்பர நிறுவனங்களின் பெயர் தான் சூட்டப்படும். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு அப்படி அல்ல. மற்ற இரண்டு ஃபார்மேட்களை விடவும் டெஸ்ட் போட்டிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒரு வீரரின் பொறுமை, திறமை மற்றும் தன்னம்பிக்கை என அனைத்தையும் சோதிக்கும் போட்டி என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் தான்.

டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பிரபலமான தொடர் என்றால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரைச் சொல்லலாம். ஒரு மிகச்சிறிய கோப்பைக்காக இரு அணி வீரர்களும் களத்தில் மோதிக் கொள்ளும் போது அனல் பறக்கும். அதேபோல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரும் பிரபலமானது. இரு அணிகளின் முன்னாள் வீரர்களான பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இதேபோல் தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களின் சாதனைகளைப் போற்றும் விதமாக குரோவ்-தோர்ப் டிராபி முதல்முறையாக நடத்தப்படுகிறது.

இத்தொடரின் முக்கய அம்சமே கோப்பை தான். பொதுவாக கிரிக்கெட் கோப்பைகள் ஏதேனும் ஒரு உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் அல்லது சில உலோகங்களின் கலவையாக இருக்கும். ஆனால், இந்தக் கோப்பையானது நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகியோர் பயன்படுத்திய மட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர்களின் மட்டையில் இருந்து ஒரு கோப்பை தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை.

இதையும் படியுங்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு இது இரண்டாவது முறை!
NZ vs ENG

மார்ட்டின் குரோவ் குடும்பத்தினர் வழங்கிய மட்டையானது, 1994 இல் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் டெஸ்ட் சதமடித்த மட்டையாகும். அதேபோல் கிரஹாம் தோர்ப் குடும்பத்தினர் வழங்கிய மட்டையானது, 1997 இல் நியூசிலாந்துக்கு எதிராக முதலிரண்டு டெஸ்ட் சதங்களை அடித்த மட்டையாகும்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட குரோவ்-தோர்ப் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடர் நவம்பர் 28 இல் தொடங்கி டிசம்பர் 18 இல் முடிவடைகிறது. கிரிக்கெட்டின் அரிய கோப்பையான குரோவ்-தோர்ப் டிராபியை கைப்பற்றப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com