மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி!

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி!

பிஎல் டி20 போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் விளையாடும் போட்டிகள்தான். ஐந்து முறை சாம்பியான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நான்கு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது.

மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஒருவார இடைவேளைக்கு பின்னர் தனது சொந்த மைதானமான வான்கடேவில் தனது அணியின் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் மும்பை அணி இருந்தது. அதேபோல், சிஎஸ்கே அணியும் முதல் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. ஆனால், சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்த ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் 7.30 மணிக்குத் தொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். ரசிகர்களின் பெருத்த எதிப்பார்ப்புக்கு இடையே மும்பை அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட வந்த ரோஹித் சர்மாவும் இஷான்கிஷனும் தொடக்கம் முதலே அதிரடி காட்டி விளையாடினர். துரதிருஷ்டவசமாக முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே தசை பிடிப்பு காரணமாக தீபக் சாகர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அதிரடியாக விளையாடி வந்த மும்பை அணியின் ஸ்கோர் 38 என இருந்தபோது தேஷ்பாண்டே வீசிய நான்காவது ஓவரில் மும்பை கேப்டன் அணி ரோஹித் சர்மா அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மும்பை அணியின் ஸ்கோர் 64 இருக்கும்போது இஷான்கிஷானும் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த அடுத்தடுத்த பேட்ஸ்மென்களும் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மும்பை அணி ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை அணியின் சார்பாக இஷான்கிஷன் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் சார்பாக ஜஜேடா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆல் ரவுண்டர் மொயின் அலியும், பென் ஸ்டோக்கும் இடம் பெறாத இந்த ஆட்டத்தில் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கோடு ஆட வந்தனர், சென்னையின் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டெவான் கான்வேவும் ருதுராஜ் கெய்க்வாடும். முதல் ஓவரிலேயே தடுமாற்றத்துடன் விளையாடிய கான்வே பெஹரண்டராப் பந்து வீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் தந்து மைதானத்தில் வெளியேறினார். அடுத்து விளையாட வந்த அஜிங்கியா ரஹானே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்காவது ஓவரில் மட்டும் அவர் 23 மூன்று ரன்கள் எடுத்து மைதானத்தையே கலகலக்க வைத்தார். 19 பந்தில் 50 ரன்களைக் கடந்து அதிரடி காட்டினார். எட்டாவது ஓவரின் கடைசி பந்தில், 27 பந்துகளைச் சந்தித்து 61 ரன்கள் எடுத்து ப்யூஸ் சாவ்லா பந்து வீச்சில் அவுட் ஆனார் ரஹானே.

அடுத்து ஆட வந்த சிவம் டூபே, ருதுராஜுடன் இணைந்து ஆடத் தொடங்கினார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டி விளையாடிய சிவம் டூபே 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கார்த்திகேயா பந்து வீச்சில் போல்ட் ஆகி அவுட் ஆனார்.

அடுத்து, ருதுராஜுடன் இணைந்தார் ராயுடு. இந்த ஜோடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 19வது ஓவர் முதல் பந்தில் ராயுடு அடித்த பவுண்டியால் சென்னை வெற்றி பெற்றது.ஆட்ட முடிவில் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். ரஹானே 16 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com