ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்ற சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான வலுவான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் சொந்த மண்ணில் வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. லக்னோ அணியும் முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்திய அதே உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் சிஎஸ்கேவை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஜெய்தேவ் உனாத்கட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் ஃபாஸ்ட் பவுலர் யஷ் தாகூர் முதன் முதலில் ஐபிஎல்லில் அறிமுகமானார்.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெயிக்வாட் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடி வந்த கான்வே 47 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. 20வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது.
அதன் பின் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 53 ரன்கள் குவித்தார். அதன் பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை தொடங்கி உள்ளது.