பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே த்ரில் வெற்றி!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே த்ரில் வெற்றி!

டைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து கான்வே மற்றும் ரஹானே இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர். வழக்கம்போல் ரஹானே 20 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 37 ரன்களை குவித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து கான்வேயுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த, ஷிவம் டூபே அசால்ட்டாக சிக்ஸர்களுக்கு விரட்டி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். ஹர்ஷல் படேல் வீசிய யார்க்கர் பந்தில் கான்வே அவுட் ஆனார். கான்வே 45 பந்துகளில் 83 ரன்களைக் குவித்தார். இதனைத் தொடர்ந்து ஷிவம் டூபே 27 பந்துகளில்  52 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

கடைசி ஓவரை வீச வந்த ஹர்ஷல் படேல் இரண்டு நோ பால்களை வீசியதால் அவருக்கு வார்னிங் வழங்கப்பட்டு, தொடர்ந்து பந்து வீசும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மீதம் இருந்த பந்துகளை வீச மேக்ஸ்வெல் வந்தார். இவரது முதல் பந்திலேயே ஜடேஜா சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். கடைசியில் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவித்தது. தோனி 1 பந்தை சந்தித்து ஒரு ரன்னும், மொயின் அலி 8 பந்தை சந்தித்து 18 ரன்னும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.

227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி நான்கு பந்துகளில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த மஹிபால், லாம்ரோர் ஆகியோரும் சிறப்பாகச் செயல்படவில்லை. அடுத்து வந்த டூ பிளஸி, மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்கள். இதனால்,  பெங்களுரு அணி 9 ஓவர்களிலேயே 100 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து, டூ பிளஸி 33 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால், மேட்ச் சிஎஸ்கே பக்கம் திரும்பியது. ஷபஸ் அகமது 10 பந்துகளில் 12 ரன்களும், தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஆர்சிபி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 33 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டன. ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் பறந்தது இந்தப் போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com