#BIG NEWS : நாளை நடைபெறவிருந்த விஜய் ஹசாரே போட்டி ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்..!

VIRAT KOHLI
VIRAT KOHLISource:MSN.COM
Published on

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை, நாளை (டிசம்பர் 24) தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடரில் தமிழ்நாடு, மும்பை, டெல்லி உள்ளிட்ட 32 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்திய அணி வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற பிசிசிஐ-யின் அறிவுறுத்தலால், இம்முறை நட்சத்திர வீரர்களின் வருகையோடு தொடர் பெரும் களைகட்டியுள்ளது.

குறிப்பாக, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி தனது சொந்த மாநிலமான டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் களமிறங்க உள்ளார். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் மும்பை அணிக்காக விளையாடவுள்ளார். இந்திய அணியின் இரு துருவங்களாகக் கருதப்படும் இவர்களது வருகையால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வழக்கத்தை விட பலமடங்கு உயர்ந்து காணப்படுகிறது.

டெல்லி அணி இடம்பெற்றுள்ள 'டி' பிரிவில், நாளை நடைபெறவிருந்த முதல் லீக் ஆட்டத்தில் ஆந்திரப் பிரதேச அணியுடன் டெல்லி மோதவிருந்தது. பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற எம். சின்னசாமி மைதானத்தில் காலை 9 மணிக்கு இப்போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலி டெல்லி அணிக்காக விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.

முன்னதாக, ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்தைக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காகச் சின்னசாமி மைதானப் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாகவே இருந்தது.

தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இப்போட்டியை நடத்துவதற்கான அனுமதியை பெங்களூரு காவல்துறையினர் அதிரடியாக மறுத்துள்ளனர். இது குறித்துப் பேசிய காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், "மைதானத்தை ஆய்வு செய்த குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் நாளை நடைபெறவிருந்த போட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மின்சார வசதி, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மற்றும் வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் போதிய திருப்தி இல்லாத காரணத்தினால், டெல்லி - ஆந்திரா அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. விராட் கோலி களமிறங்குவதைக் காணக் காத்திருந்த ரசிகர்களுக்கு, போட்டியே ரத்து செய்யப்பட்ட செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கல்லூரி வாசலைத் தாண்டி கல்வியை கொண்டு சேர்க்கும் TNOU.! என்னென்ன படிப்புகள் கிடைக்கும் தெரியுமா.?
VIRAT KOHLI

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com