சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு, முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தல தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை அவர் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று 5 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.
தற்போது 41வயதாகும் தோனி சமீபத்திய ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போதே அவருக்கு முழங்காலில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதனால் அவர் ஒவ்வொரு போட்டியிலும், பேட்டிங்கின்போது, கடைசி 2 ஓவர்கள் இருக்கும்போது மட்டுமே களமிறங்கி வந்தார்.
ஐபிஎல் சீசன் தொடக்கத்திலேயே, தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் இதுகுறித்து பேசியிருந்தார். கேப்டன் தோனி முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வருவது உண்மைதான் என்றும், தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும், இந்த காயங்களால் அவர் ஐபிஎல்-லில் இருந்து விலக வாய்ப்பில்லை எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து தற்போது ஐபிஎல் சீசன் தொடர் இறுதிப்போட்டி முடிவடைந்ததும், சென்னை அணி வீரர்கள் மைதானம் முழுவதும் சுற்றிவந்து ரசிகர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியபோது, தோனி அவரது காலில் கட்டு போட்டிருந்ததும் ரசிகர்களின் மனதை கலங்கடித்தது.
இந்நிலையில் தோனி சிகிச்சைக்காக மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் மருத்துவனையில் இந்த வாரம் அனுமதிக்கப்பட்டு, அவரது முழங்கால் காயம் எப்படி இருக்கிறது என்ற சோதனை நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது இதே மருத்துவனையில்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தோனியின் காயத்தின் நிலைமையை பொறுத்துதான் அடுத்தாண்டு ஐபிஎல்-லில் அவர் தொடருவாரா? மாட்டாரா? என்பதும் தெரியவரும்.