
இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் முதல் ரோஹித் சர்மா வரை பல வீரர்கள் கேப்டன்களாக இருந்துள்ளனர். இதில் சிலர் வெற்றிகரமான கேப்டன்களாகவும் வலம் வந்துள்ளனர். இருப்பினும் ஒரு சில கேப்டன்கள் மட்டுமே ஐசிசி கோப்பைகளை வென்று சாதனைப் படைத்திருக்கிறார்கள். எத்தனை கேப்டன்கள் வந்தாலும் எக்காலத்திற்கும் சிறந்த கேப்டன் யார் என்பதை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சமீபத்தில் குறிப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி முதன்முதலாக 1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகககோப்பையை வென்றது. இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய தமிழக வீரர் தான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அப்போதே இவர் அதிரடியாக விளையாடும் திறன் பெற்றிருந்தார். இவர் இந்திய அணிக்கு கேப்டனாகவும் சில காலங்கள் இருந்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராகவும், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட்டு வந்தார். தற்போது தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி தான் என சமீபத்தில் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய அணிக்கு கிடைத்த கேப்டன்களில் தோனி மிகச் சிறந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது யாருக்குமே தெரியாது. ஏன் தோனிக்கே அது தெரியாது. இன்னமும் ஒருசில ஆண்டுகள் தோனி விளையாடுவார் என நான் நினைக்கிறேன். அந்த அளவிற்கு உடல் தகுதியுடன் தோனி இருக்கிறார். சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் அவர் இல்லையென்றாலும், எப்போதும் தோனி தான் நம்பர் 1 கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. எக்காலத்திற்கும் சிறந்த கேப்டனாக தோனி அறியப்படுவார்” என ஸ்ரீகாந்த் கூறினார்.
கிரிக்கெட் உலகம் கண்ட மகத்தான கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. இந்திய அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் இவர் தான். அதோடு ஐசிசி நடத்திய ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என 3 கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். வேறு எந்த கேப்டனும் இந்தச் சாதனையை செய்தது கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் ஓய்வுக்குப் பிறகே உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப்பை அறிமுகப்படுத்தியது ஐசிசி. ஒருவேளை முன்பே இந்தக் கோப்பை அறிமுகமாகி இருந்தால், இதனையும் வென்றிருப்பார் தோனி.
சர்வதேச கிரிக்கெட் தவிர்த்து இந்திய அளவிலான ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்தார் தோனி. மேலும் வெவ்வேறு நாடுகளின் உள்ளூர் அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் லீக் தொடரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் தலைமையின் கீழ் 2 முறை கைப்பற்றியது.
தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது தெரியவில்லை. அவர் அதிக நேரம் பேட்டிங் செய்யவில்லை என்றாலும், அவரைக் காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்தில் குவிகின்றனர். ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு வெளிநாட்டு வீரர்களே ஆச்சரியப்படுகின்றனர்.