2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த 'வின்னிங் ஷாட்' சிக்சரை கெளரவிக்கும் வகையில், அந்த சிக்சர் விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்ற மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து உள்ளது. தோனி அடித்த சிக்சர் விழுந்த குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள நான்கு அல்லது ஐந்து இருக்கைகளை அதன் நினைவிடமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் போது, அந்த நினைவிடம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, வரும் சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் ஐபிஎல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியின்போது, மகேந்திர சிங் தோனியை கெளரவிக்கவும், பாராட்டு விழா நடத்தவும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
உலக கிரிக்கெட் வரலாற்றில், விளையாட்டு வீரர் ஒருவர் அடித்த சிக்சரை நினைவுகூரும் விதத்தில் நினைவிடம் அமைப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கெனவே மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட்டில், அம்மாநில கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் பெயரில் ஒரு பெவிலியன் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.