‘நடராஜன் கிரிக்கெட் அகாடமி’ மைதானத் திறப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!

‘நடராஜன் கிரிக்கெட் அகாடமி’ மைதானத் திறப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!
Published on

கிரிக்கெட் விளையாட்டில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடராஜன். தமிழகத்தின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை தனது சொந்த ஊராகக் கொண்ட இவர், கிரிக்கெட் உலகில் தான் மட்டும் பேரும் புகழோடு வாழ்ந்தால் போதாது, தனது ஊரைச் சேர்ந்தவர்களும் இந்த விளையாட்டில் ஜொலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தனது ஊரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தையே உருவாக்கி இருக்கிறார்.

இந்த, ‘நடராஜன் கிரிக்கெட் அகாடமி’ மைதானத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கலந்துகொண்டு மைதானத்தைத் திறந்து வைத்தார். மேலும், இந்த விழாவில் நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு மற்றும் புகழ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்துப் பேசிய தினேஷ் கார்த்திக், “இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆரம்பத்தில் தமிழக அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து விளையாடி, பிறகு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி இன்று இந்த கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி இருக்கிறார். அவரிடம் எனக்குப் பிடித்த விஷயமே, தனது வாழ்வில் முன்னேற உதவியவர்களை என்றும் மறக்காமல், அவர்கள் மீது மரியாதை வைத்திருப்பதுதான்.

பல்வேறு ஊர்களிலிருந்தும் பலரும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். ஆனால், தனது ஊரில் உள்ள இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்வர வேண்டும் என்று யோசித்து, அவர்களுக்காக ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்கி இருப்பது மிகப் பெரிய விஷயம். நானும் கூட கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால், இதுபோன்று ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் யோசனை எனக்கு வரவில்லை. நடராஜன் அதை நிஜமாக்கிக் காட்டி இருக்கிறார்” என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் தினேஷ் கார்த்திக்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com