'தயான் சிங்'-'தயான் சந்த்' ஆனது எப்படி தெரியுமா?

'தயான் சிங்'-'தயான் சந்த்' ஆனது எப்படி தெரியுமா?
Published on

1905 ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் ஜான்சியில் ஆகஸ்ட் 29 ம் தேதி பிறந்த  இவர் இந்திய ஹாக்கி அணியில் பங்கேற்றவரை ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து தங்கம் வென்றது இந்தியா. 1928 ம் ஆண்டு முதல் 1956 வரை இந்தியா தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. அதில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர் ஹாக்கி வீரர் தயான் சந்த். ஹாக்கி உலகம் மறக்க முடியாத இந்திய ஹாக்கி அணியின் வீரர்.

ஒரு முறை தயான் சந்த் தன் தந்தையுடன், ராணுவத்தில் உள்ள இரு பிரிவுகளுக்கு இடையே நடந்த ஹாக்கி போட்டியை பார்த்துக்கொண்டு இருந்தார். ஒரு அணி தோல்வியை தழுவிக்கொண்டு இருந்தது. அப்போது தயான் சந்த் தன் தந்தையிடம் "எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தோல்வியை சந்திக்கும் அணியை வெற்றி பெறச் செய்வேன்" என்றார். அவர் சொன்னதை ஏற்று அவருக்கு விளையாட அனுமதி வழங்கப்பட்டது.

அந்த போட்டியில் 4 கோல்கள் போட்டு அந்த அணியை வெற்றி பெறச்செய்தார் தயான் சந்த். அதுவே அவர் தன் 16 வயதில் சிறுவர் ராணுவ ரெஜிமென்ட்டில் சேரவும் உதவியது.

ராணுவ வீரர்கள் இரவில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் போது தயான்  நிலவு ஒளியில் ஹாக்கி பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பார். இதனை கவனித்த தயான் சந்தின் முதல் கோச் பங்கஜ் குப்தா, "தயான் சிங் ஒரு நாள் நீயும் இந்த நிலா போல ஹாக்கி உலகில் பிரகாசிப்பாய்" என்று வாழ்த்தினார். அதிலிருந்து தான் தயான் சிங் என்ற பெயர் தயான் சந்த் ஆனது. சந்த் என்றால் சந்திரன் என்று பொருள்.  

தயான் சந்த்தின் பொழுதுபோக்கு வேட்டையாடுதல், மீன் பிடித்தல், சமையல் செய்தல், பில்லியர்ட்ஸ், கேரம் விளையாடுதல். கிரிக்கெட் கூட விளையாடுவார் தயான் சந்த்! புகைப்பட கலையும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

51 வயதில் ராணுவத்திலிருந்து மேஜராக பதவி வகித்து விலகினார். அதே ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. தயான் சந்த் 1979 ம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி நுரையீரல் புற்றுநோய் காரணமாக காலமானார். ஜான்சியில் அவர் விளையாடி மகிழ்ந்த மைதானத்திலேயே அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்திய அரசு அவரின் தபால் தலை வெளியிட்டு அவரை கெளரவபடுத்தியது. டெல்லி ஹாக்கி மைதானத்திற்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டது.

இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ம்தேதியை தேசிய விளையாட்டு தினமாக இந்திய அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்நாளில்தான் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com