டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த 5 அணிகள் எவை தெரியுமா?

T20 Cricket
T20 Cricket
Published on

டி20 போட்டிகள் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை உலக நாடுகளில் எந்தெந்த அணிகள் அதிக தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? சரி, அதிக தோல்விகளைச் சந்தித்த 5 அணிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க!

உலகில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் விளையாட்டு, நாளுக்கு நாள் புதிய விதிகளுடன் புதுப்பொலிவுடன் விருந்தளிக்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வகையாக விளையாடப்படும் கிரிக்கெட்டில் உலகக்கோப்பைத் தொடர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலக்கோப்பையை இந்தியா வென்ற பிறகு, கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. டி20 போட்டிகளின் வருகைக்குப் பிறகு, பந்துகள் பவுண்டரி எல்லைகளைத் தொடுவதையும், தாண்டுவதையும் அதிகமாக பார்க்க முடிகிறது.

அதிரடி ஆட்டம் தான் டி20 போட்டியின் பிரதான எண்ணமாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்குத் தீனி போடும் விதமாக பேட்டர்களும் அதிரடி ஆட்டம் ஒன்றையே குறிக்கோளாக வைத்துள்ளனர். அதிரடிக்கு பெயர் போன டி20 போட்டிகளில் கூட குறைவான ரன்களுக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்தி, பந்துவீச்சாளர்களும் தங்கள் திறமையை அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.

டி20 போட்டிகளில் அதிக தோல்விகளைப் பெற்றுள்ள சர்வதேச அணிகளில் முதலிடம் வகிப்பது இலங்கை தான். தற்போது இந்தியாவுடன் நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி, இந்த மோசமான சாதனைக்கு சொந்தமாகியுள்ளது. 2014 ஆம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இலங்கை அணி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் உலகச் சாம்பியனுக்கா இந்த நிலைமை என்று இலங்கையின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். மொத்தமாக இலங்கை அணி 105 சர்வதேச டி20 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து முதலிடத்தில் உள்ளது.

இலங்கைக்கு அடுத்து 104 தோல்விகளுடன் இரண்டாம் இடத்தில் வங்கதேச அணி உள்ளது. இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 101 தோல்விகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தலா 99 தோல்விகளுடன் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
சிக்ஸ் அடிச்சா அவுட்! எந்த நாட்டில் தெரியுமா?
T20 Cricket

டி20 போட்டிகளில் அதிக தோல்விகள் பெற்ற 5 அணிகளில் 2 அணிகள் உலகக்கோப்பையை வென்றவை. ஜெயவர்த்தனே, சங்ககாரா மற்றும் மலிங்கா போன்ற முன்னாள் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணி வெற்றிக்காக போராடி வருகிறது. அவ்வப்போது சில வெற்றிகளைப் பெற்றாலும், சொல்லிக் கொள்ளும் படியாக தொடர்ந்து ரன் குவிக்கும் வீரர்கள் இலங்கையில் யாருமில்லை என்பதே இவர்களின் தோல்விக்கு காரணமாக அமைகிறது.

அணி முழுவதுமே அதிரடி ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், சமீப காலமாக நீடித்து வரும் சம்பளப் பிரச்சினையின் காரணமாக, தங்களது இயற்கையான ஆட்டத்தைத் ஆடத் தவறி விட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com