ஐபிஎல் 16 வது சீசன் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகளும் நிகழ்த்தப்பட்டு, கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இந்த போட்டிகளை மைதானத்திற்கு சென்று காண்பதில் நம்மைப் போன்ற ரசிகர்களே அதிகம் விரும்பினாலும், பல விஐபிகளும் கிரிக்கெட் போட்டிகளை, டிவிக்களில் பார்க்காமல் மைதானத்திற்கு வந்து போட்டிகளைக் கண்டு ரசித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்றைய ஐபிஎல் 16 வது சீசன் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.
கேப்டன் தோனியைப் பொறுத்தவரை நேற்றைய போட்டி, சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று தோனி பங்கேற்கும் 200வது போட்டியாகும். அதனால் அந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 3 ரன்களில் தோல்வியைத் தழுவினாலும், தல தோனி மைதானத்தில் என்ட்ரி ஆனதிலிருந்தே ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.
அந்தவகையில், பல பிரபலங்களும் மைதானத்தில் இருந்து ஆட்டத்தை ரசித்த நிலையில், சத்குருவும் மைதானத்திற்கு வந்திருந்து ஆட்டத்தைக் கண்டுகளித்தார்.
ஒரு கிரிக்கெட் ரசிகரைப், கைதட்டி உற்சாகப்படுத்தி போட்டியை ரசித்து மகிழ்ந்தார். இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.