உயிரைக் குடிக்கும் போதைப் பழக்கங்கள் தேவையா ?

உயிரைக் குடிக்கும் போதைப் பழக்கங்கள் தேவையா ?

என்னதான் விஞ்ஞானம் முன்னேறி விழிப்புணர்வுகள் தொடர்ந்தாலும் அதே விஞ்ஞானத்தின் தூண்டுதல்களால் தற்போது போதைக்கு அடிமையாகி வாழ்வை சீரழித்துக் கொள்வோரின் சதவீதம் அதிகமாகி உள்ளது. இதில் பெண்களும் அடங்குவது வேதனை. புகையிலை என்பது நமது முன்னோர் காலத்திலும் இருந்தது. ஆனால் அவற்றை உபயோகிக்க கட்டுப்பாடுகளும் இருந்ததால் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. தாத்தாவின் முன் பேரன் புகை பிடிக்க அஞ்சுவான் அன்று, இன்றோ தாத்தாவும் பேரனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையோ  அல்லது புகை பிடிப்பதையோ காட்சி ஊடகங்களில் எளிதாக காணமுடியும். அவ்வளவு ஏன்? தாத்தா வீட்டில் புகைத்தால் பேரன் கல்லூரி வாசலிலோ அல்லது நண்பர்களுடன் பப்புகளிலோ புகைக்கிறான். இதில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் இந்தப் பழக்கத்தினால் மரணிப்பதாக நிபுணர் அளித்த தகவல் பகீரென்கிறது. நிபுணர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளலாமா ?

மேலும் தினமும் 5500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆவதாக .நிபுணரின் தகவல்  கூறுகிறது. புகையிலை பழக்கத்திற்கு ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட முதன்மை விசாரணை அதிகாரியும், பிரபல தொற்று நோய்கள் நிபுணருமான நரேஷ் புரோகித் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார் . அதில் அவர் கூறிய செய்திகள்தான் இவை

"அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கு 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். இளைஞர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும் பீடி, ஹூக்காவுக்கு பதிலாக சிகரட்டுக்கு மாறிவிட்டார்கள். மேல் தட்டு மக்கள் சிகரெட்டுக்கு பதிலாக சிகாருக்கு மாறிவிட்டார்கள்.ஆனால் சிகாரில் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் தினமும் 5 ஆயிரத்து 500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், ஆஸ்துமா போன்ற பாதிப்புக்கு உள்ளார்கள். பிறர் புகைக்கும் போது பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதே அளவிலான தீங்கு ஏற்படும். அவர்களுக்கும் நுரையீரல், புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு சுவாச தொற்று ஏற்படும்.

ஹோட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகை பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தப் பகுதிகளையும் ரத்து செய்து பொது இடங்களில் 100% தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளை குறைக்க முடியும். ஆண்டு தோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். புகையில்லா புகையிலேயே பயன்படுத்துவதால் 35 ஆயிரம் பேர் பலியாகிறார்கள். இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீதம் மரணங்கள் புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகிறது. புகையிலை இருந்து உருவாகும் புகையினால் புற்றுநோயை உருவாக்கும் 80 காரணிகள் இருக்கின்றன. பெண்களுக்கு ஏற்படும் புகையிலை பழக்கத்தால் கர்ப்பப்பை புற்றுநோய் ,மார்பக புற்று நோய் ஏற்படுகின்றன. புகைப் பழக்கத்தை விட முடியாதவர்கள் மனநல ஆலோசனை அணுகினால் பலன் கிடைக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

இனி பொதுவெளியில் புகை பிடிப்பவரைக் கண்டால் புகையை சுவாசிக்கும் எங்களுக்கும் தீங்கு நேரும் என்பதை அறிவுறுத்தி புகையைத் தவிர்ப்போம். அவர் சொன்னது போல் புகை பிடிக்க 100 சதவிகிதம் தடை விதித்தால் மட்டுமே இதிலிருந்து நாம் விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com