

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுபவர். இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். தனது விளையாட்டுக் காலத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஜாம்பவான் வீரராக போற்றப்படுபவர். அத்தகைய கிரிக்கெட் வீரரிடம் , கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் டிராவிட் அளித்துள்ள பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அல்டிமேட் கேப்டன் (Ultimate Captain) என்னும் புகழ்பெற்ற விளையாட்டு இணையதளத்திற்கு ராகுல் டிராவிட் நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த சுவாரசியமான நேர்காணலில் இரு கேப்டன்களில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்யும் சுற்று தொடங்கப்பட்டது. அந்த சுற்றில் ராகுலின் தேர்வுகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சுற்றில் முதலில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன்களில், இருவரில் ஒருவரை மட்டும் தேர்வு செய்யும் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த சுற்றில் பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன், ஸ்டீபன் பிளெமிங், இயான் மோர்கன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டதில் ஸ்டீவ் ஸ்மித் சிறந்தவர் என்று ராகுல் தேர்வு செய்தார். அடுத்த சுற்றில் ராகுலின் சம காலத்து வீரர்களான ரிக்கி பாண்டிங் , ஸ்டீவ் வா போன்றோரின் பெயரும் இடம் பெற்றது. இந்த சுற்றில் ஸ்டீவ் ஸ்மித்தை விட ரிக்கி பாண்டிங் சிறந்த கேப்டன் என்று ராகுல் தேர்வு செய்தார்.
அடுத்ததாக பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாவில் ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு பணிக்கப்பட்டார். இருவரும் ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களாக பார்க்கப்பட்டாலும் ராகுலின் தேர்வு ஸ்டீவ் வா வாக இருந்தது. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியாத அணியாக மாற்றியதில் ஸ்டீவ் வா பங்கு அதிகம் என்பதால் , அவர் அவ்வாறு தேர்வு செய்திருக்கக்கூடும்.
அந்த சுற்றின் தொடர்ச்சியில் சிறந்த கேப்டன் ஸ்டீவ் வா அல்லது விராட் கோலி என்று கேட்கப்பட்டது. சட்டென்று எதையும் யோசிக்காமல் ராகுல் விராட் கோலியை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை செதுக்கிய கேட்பனை விட , இந்திய அணியை அதிக போட்டிகளில் வெற்றி பெற வைத்த கேப்டனை ராகுல் விரும்பினார்.
அடுத்ததாக விராட் கோலியா? பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானா? என்று கேள்வி வரும் போது அவர் இம்ரான் கானை தேர்வு செய்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி 1992 இல் உலகக் கோப்பையை பெற்றுத் தந்ததால் அவர் , விராட்டை முந்தினார். அடுத்த கேள்வியில் இம்ரானை விட்டுவிட்டு கிளைவ் லாயிட்டை தேர்வு செய்தார் ராகுல். அவர் 2 உலகக் கோப்பைகளை மேற்கு இந்திய தீவுகளுக்கு வென்று கொடுத்தவர்.
இறுதியாக கிளைவ் லாயிட் மற்றும் மகேந்திரசிங் தோனி இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ராகுலுக்கு ஏற்பட்டது. ராகுல் அப்போது எதையும் யோசிக்காமல் உடனடியாக தோனியின் பெயரை தேர்வு செய்தார்.இந்திய கேப்டனான மகேந்திரசிங் தோனி டி20 உலகக் கோப்பை , ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் கிளைவ் லாயிட் , பாண்டிங் , ஸ்டீவ் வா போன்ற ஜாம்பான் கேப்டன்களையும் பின்னுக்கு தள்ளி தோனி பெயர் பெற்றுள்ளார். ராகுல் டிராவிட்டின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.