ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்!

விழிப்புணர்வுக் கட்டுரை!
ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்!

நாங்களும் யூத் தான்;

ங்களுக்கு என்ன வயசு ? என்று கேட்டால் உடனே பதில் சொல்லத் தயங்குவர் சிலர். பெண்களுக்கோ அறவே பிடிக்காத கேள்வி இது. பெரும்பாலும் பெண்கள் உண்மையான வயதை சொல்லுவதில்லை. இரண்டு மூன்று வயது குறைத்துச் சொல்லி திருப்திப் பட்டுக்கொள்வர்.

நம்மை இளமையாகக் காட்டிக்கொள்ள பெரும் முயற்சி செய்கிறோம். உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது, லேட்டஸ்ட் உடைகளை அணிவது என வயதை குறைத்துக் காட்ட முயற்சித்தாலும், நிறம் மாறிய நம் வெள்ளைத் தலைமுடி உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடும்.

வெள்ளை முடி அல்லது நரை முடி தற்போது நாற்பதைக் கடந்தவர்களுக்கு மட்டுமல்ல, முப்பது வயதுக்காரர் களுக்கே பெரும் பிரச்சனையாகி விட்டது. விளைவு? கடைகளில் விற்கப்படும் ஏராளமான ஹேர் டைக்களை வாங்கிப் போடுகின்றனர், அதன் விளைவுகளைப் பற்றி அறியாமலேயே.

 தலைமுடி ஏன் நரைக்கிறது?

முடியின் கருமை நிறத்துக்குக் காரணம்'மெலனின்’ என்ற நிறமிதான்.  நாற்பது வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்’ என்ற என்ஸைம் கட்டுப்படுத்தித் தடைசெய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவை. அதிக வெயிலில் வெளியில் அலைந்தால், புற ஊதாக் கதிர்கள், முடியின் ஈரத்தன்மையை உறிஞ்சி, முடியை வறண்டுபோகச்செய்யும். இதனாலும் முடி நரைக்கலாம். மிக முக்கியக்காரணம் தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, கண்டீஷனர் போன்ற பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களே நரை ஏற்படக் காரணம்.

செயற்கை சாயத்தால்  உடலுக்கு என்ன ஆபத்து?  

லைமுடிக்குப் போடும் செயற்கை சாயத்தால்  உடலுக்கு அப்படி என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்று நினைக்கிறீர்களா? பல்வேறு வகையான நோய்களின் மூலகாரணமே இதனால்தான் வருகிறது. ஹேர்டையில் பெரும்பாலும் அம்மோனியா மற்றும் பெராக்ஸைடு கலந்திருக்கும். இது தலைமுடியை உடைத்து, முடி வளர்ச்சியைத் தடுக்கிறது. அரிப்பு, தோல் எரிச்சல், சிவத்தல், உச்சந்தலையில் எரிச்சல், வீக்கம், இளஞ்சிவப்பு கண் வெண்படல கண்நோய், கண்களில் வீக்கம், இருமல், மூச்சுத்திணறல், நுரையீரல் வீக்கம், தொண்டை அசெளகரியம், நாளமில்லா சுரப்பிகளின் செயலிழப்பு, சுவாசக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் ஆஸ்துமா தாக்குதல்களை தூண்டலாம். சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வழிசெய்கிறது.

கிராமத்துப் பெட்டிக்கடைகளில்  கூட பாக்கெட் ஹேர்டைக்கள் விற்பனையாகின்றன. இவற்றில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, பினலின், டயமின் மற்றும் பாராபெனிலெனிடமைன் (PPD ) என்ற ஆபத்து நிறைந்த கெமிக்கலை பயன்படுத்துகின்றனர். அதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் நரை முடி கூடுதலாக உருவாகுதல், தலைமுடி உதிர்வு, முகக் கருமை, இளமையிலேயே வயதான தோற்றம், சரும அலர்ஜி போன்ற  பாதிப்புகளையும் உண்டாக்கும். அலர்ஜியில் தொடங்கி சருமத்தின் வழியாக உள் நுழைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதில் இருக்கும் அமோனியா, போன்றவை படிப் படியாக உடல் உறுப்புகளிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.

நரம்பியல் மருத்துவ நிபுணரான என் தோழி திடுக்கிடும் தகவல் ஒன்றை சொன்னார். சமீபத்தில் அவருடைய பேஷண்ட் ஒருவர் Peripheral Neuropathy என்ற கை, கால்கள் மரத்துப் போதல் பிரச்சனைக்காக அவரிடம் வந்திருக்கிறார். ஐம்பத்தி இரண்டு வயதான ஒருவருக்கு கை கால் மரத்துப்போதல் என்பது சற்றே அசாதாரணமான ஒன்று. பத்தாண்டுகளாக அவருக்கு புகை பிடிக்கும் பழக்கமும், ஐந்தாண்டுகளாக தொடர்ந்து கெமிக்கல் ஹேர் டை உபயோகிக்கும் பழக்கமும் இருக்கிறது. சிலவகையான ஹேர் டைகளில் Lead எனப்படும் ஈயத்தை கலக்கின்றனர். இதுவே மரத்துப்போதலுக்கு வித்திடுகிறது.

இயற்கைக்கு மாறுவோம்;

த்தனை கெடுதல்களை வாரி வழங்கும் கெமிக்கல் ஹேர் டையை உபயோத்துத்தான் ஆகவேண்டுமா? கண்ணை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, கருமை நிற முடிக்கு ஆசைப்பட்டு, உடல் இயக்கத்திற்கு கேடு விளைவிக்கும், டையை பயன்படுத்தலாமா? சரி, இதற்கு மாற்று வழியே இல்லையா என்றால் இருக்கிறது.

1. வயதானால் நரைமுடி வருவது சகஜம் என்று ஒத்துக்கொண்டு, தல அஜீத் ஸ்டைலில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரிஜினல் முடியோடு காட்சி தருவது.

2. முப்பதுகளிலேயே அங்கிள், ஆன்ட்டியாக விரும்பவில்லை என்று நினைத்தால், இயற்கையான ஹேர்டையை உபயோகிக்கலாம்.

மருதாணியை அரைத்து தலையில் பூசி தங்க நிற முடிக்கு சொந்தக்காரர் ஆகலாம். ஹென்னா எனப்படும் செயற்கை மருதாணி அல்ல, செடியில் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்துப் பூச வேண்டும்.  

3. இல்லை , எனக்கு தங்க நிறம் வேண்டாம், கருமை நிறம் தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கும் வழி இருக்கிறது. மருதாணி போட்டு, தலைமுடியை அலசி காயவைத்து, அவுரிப்பொடியை பூசி, ஒரு மணி நேரம் கழித்து அலசிக்கொள்ளலாம். ஒரிஜினல் கறுப்புக் கலரை தந்து விடும் அவுரி. இது நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கும். ஒரு மாதம் வரை கலர் போகாது.

‘இயற்கை வழியில் முடியை கருமையாக்கிக் கொண்டு, நாமும் யூத் தான் என்று வலம் வரலாம் வாங்க’.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com