ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும் மலர் தழைகள்!

ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும் மலர் தழைகள்!
Published on

- மாலதி மணியன், புதுச்சேரி

இயற்கையின் கொடை

அந்தக் காலத்தில் தம்மைச் சுற்றி விளைந்த மலர் தழைகளைக் கொண்டே ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். எளிமைக்கு எளிமை... பலனுக்குப் பலன்... ஆஹா!

மந்தார இலை: மந்தார மரம் வேத சக்திகள் நிறைந்தது. சிறந்த மூலிகை விருட்சம். ஆலயங்களில் மந்தார இலையில் பிரசாதம் வழங்கப்படுவதைக் காணலாம். முன்காலத்தில் மந்தார இலையில் ஆடைகள் தைத்து அணிவார்களாம்.

மந்தார இலையில் உணவு உண்பது மிகவும் நல்லது. மந்தார இலைகளைக் கொண்டு சிறிய பாய் போலத் தைத்து, அதில் அமர்ந்து தியானம், பூஜைகள் செய்தால் விசேஷமான மோக சக்திகள் கிடைக்கும்.

மூலிகைகள்: தினம்தோறும் மூன்று வகை மூலிகைகளாவது நம் வயிற்றுக்குள் செல்லும்படிப் பார்த்துக்கொண்டால், எந்த நோயுமின்றி  ஆரோக்கியமாக வாழலாம். புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை, துளசி, வில்வம் – இவற்றில் ஏதாவது ஒன்றாவது சாப்பிடுவது நல்லது.

ஆல இலை: வாழை, பப்பாளி என்று பெரிய பெரிய இலைகளைக் கொண்ட மரங்கள் இருக்கின்றன. ஆலஇலையை நாம் சிறிய வடிவில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், ஐந்தடி நீளம், ஐந்தடி அகலம் கொண்ட ஆலஇலை இருக்கிறது. பிரம்மாண்டமான இந்த ஆல இலையில்தான் நடராஜப் பெருமான் ஆலகால நடனம் ஆடினார் என்பார்கள். ஆலிலை கிருஷ்ணர் என்கிறோமே அந்த ஆலிலையும் இதுதான்! இந்த இலை ராஜஆலம் என அழைக்கப்படுகிறது.

தாமரை: நீரில் மலரும் தாமரையை நாம் அறிவோம். நமக்குப் பலவிதமாகப் பயன்தரும் அழகான இந்த தாமரை, செந்தாமரை, வெண் தாமரை எனப்படும். கொத்துக் கொத்தாய் வேரொடு காணப்படுவது ஆகாயத் தாமரை எனப்படுகிறது.

கல் தாமரை என்று ஒருவகை உண்டு. மலைகளின் இடுக்கில் உற்பத்தியாகும் இதன் இலைகள் 1 ரூபாய் நாணயம் போல வட்டமாக இருக்கும். இதில் மலர் கிடையாது. இலையைப் பறித்து உலர்த்திய பிறகும் பொடியாகச் செய்து வைத்தாலும் சிறிது நீர்பட்டு விட்டால் போதும், பச்சை நிறம் திரும்பி புதியது போலாகிவிடும். இது ஒரு அரிய மூலிகை.

வெண் தாமரைப் பூவை கஷாயம் போலச் செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் எதுவாக இருந்தாலும் முற்றிலும் நீங்கிவிடும்.

செந்தாமரைப் பூ மூலநோய்க்குச் சிறந்த மருந்து.

தும்பை: இட்லி, சோறு போன்றவற்றின் நிறத்துக்கு தும்பைப் பூவைத்தான் உதாரணமாகச் சொல்வோம். தும்பைச் செடி வீட்டிலிருந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியா இருக்கும் என்பார்கள். குழந்தைகளுக்கு வயிற்றில் வரும் பூச்சித் தொல்லைகளுக்குச் சிறந்த மருந்து. கோரோசனை என்னும் மாத்திரையில் இந்தப் பூக்களும் சேர்க்கப்படுகின்றன. மிகுந்த மருத்துவக் குணம் கொண்ட தும்பையை நம் வீட்டில் தொட்டிகளில்கூட வளர்க்கலாம். இந்த மலரை விநாயகருக்குச் சாற்றினால் வேண்டும் வரம் தந்துவிடுவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com