பிரேசில் அணி செர்பிய அணியை வீழ்த்தியபோது பிரேசில் அணியைச் சேர்ந்த இரண்டு பிரபல விளையாட்டு வீரர்கள் கண்ணீர் விட்டனர். அவர்களில் ஒருவர் வெளிப்படுத்தியது ஆனந்த கண்ணீர்!
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எடுக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் பந்தை தனது இடது காலால் வாங்கிய ரிச்சர்லின் அதைக் காற்றில் உயர பறக்க விட்டார். பின் வலது காலால் அற்புதமாக கோல் அடித்தார். இந்த தொடரின் தலைசிறந்த கோல்களில் ஒன்று என்று அது கூறப்பட்டது. அந்த ஆட்டத்தில் பிரேசில் எடுத்த இரண்டு கோல்களும் ரிச்சர்லின் எடுத்தவைதான்.
ஆனால் பிரேசில் அணியின் மற்றொரு பிரபல வீரரான நெய்மர் சோகத்தில் ஆழ்ந்தார். இதுவரை 75 கோல் அடித்தவர். மூன்றாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறார். செர்பிய வீரர் நிக்கோலா தனது முழங்காலால் நெய்மர் கணுக்காலை தாக்கியதில் அவருக்கு கடும் காயம் ஏற்பட்டது. கணுக்கால் வீக்கம் ஏற்பட போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம். தொடர்ந்து அவர் இந்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியுமா என்பது சந்தேகம்.
இதற்கு முன்பும் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் காயம் ஏற்பட்டதால் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்க சிலரைப் பார்ப்போம்.
பிரான்ஸைச் சேர்ந்த ஜஸ்ட் ஃபோன்டெய்ன் என்பவர் 1958இல் ஸ்வீடனில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மொத்தம் பதிமூன்று கோல்கள் அடித்தார். இது இன்றுவரை அசைக்க முடியாத சாதனை. ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு காலில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டிகளில் இருந்து விலக நேர்ந்தது.
நெதர்லாந்தைச் சேர்ந்த மார்கோ வான் பஸ்டென் கால்பந்தை வேகமாக அடித்து ஆடுவதில் புகழ் பெற்றவர். சோவியத் யூனியனுக்கு எதிராக1988ல் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் அதிசயத்தக்க விதத்தில் கோல்களை அடித்தவர். கணுக்காலில் காயம் ஏற்பட பல அறுவை சிகிச்சைகளை அங்கு செய்ய வேண்டியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஓய்வெடுத்தார். பின் மீண்டும் போட்டிகளில் கலந்து கொண்ட போது அவரால் வெற்றிகரமாக விளையாட முடியவில்லை.
உலகப் புகழ்பெற்ற பிரேசில் அணியின் விளையாட்டு வீரர் ரொனால்டோ. ஒரு மாபெரும் அதிரடி வீரர். பந்தை நுணுக்கமாக கையாண்டு கோல்களைப் போடத் தக்கவர். பலமுறை காயங்களிலிருந்து மீண்டு வந்தார். இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் பல மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு, அவர் மீண்டு வந்து 2002 உலகக் கோப்பையில் பிரேசில் அணி ஐந்தாவது உலகக் கோப்பையை வெல்வதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். என்றாலும் மீண்டும் காயங்கள் ஏற்பட பழையபடி அவரால் ஆட முடியவில்லை. 2008ல் அவர் ஆடிக்கொண்டிருந்த மிலன் கிளப் அவரை விடுவிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது.
கடந்த சில நாட்களில்
வேல்ஸ் அணியை ஈரான் அணி 2-0 கோல் கணக்கில் வென்றது.
பிரேசில் அணி செர்பிய அணியை 2-0 கோல் கணக்கில் வென்றது
துனீஷியாவை ஆஸ்திரேலியா 1-0 கோல் கணக்கில் வீழ்த்தியது.
போலந்து அணி கவுதி அரேபியாவை 2-0 கோல் கணக்கில் தோல்வி காண வைத்தது.
அமெரிக்காவுடனான இங்கிலாந்து ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.
மெக்சிகோ அணியை அர்ஜென்டினா அணி 1-0 கோல் கணக்கில் வீழ்த்தியது.
பெல்ஜியம் அணி மோரோக்கோ அணியிடம் 0-2 என்ற விதத்தில் தோற்றது.
கோஸ்டாரிகா அணி 1-0 கோல் கணக்கில் ஜப்பானை தோல்வியுறச் செய்தது.
******************