இந்திய மாநிலங்களின் பார்வை தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மீது விழுந்துள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் இன்று நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் தான். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையயத்தின் சார்பில், ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 1 இரண்டு நாள்களில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்த அனுமதிக்கக் கூடாது என பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் முன்னதாக பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கார் பந்தயத்தால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து பாதிக்கப்படும் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல சிரமம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இருங்காட்டுக்கோட்டையில் இருபுறமும் சுற்றுச்சுவர் கொண்ட சுற்றுப்பாதையில் கார் பந்தயத்தை நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து வாதிட்ட தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கடந்த முறை கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கிலும் இதே வாதங்கள் தான் வைக்கப்பட்டன. இருப்பினும் மக்களின் பாதுகாப்பு, ஒலிக் கட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைக்கு எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது உள்பட 7 நிபந்தனைகளுடன் கார் பந்தயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே போல் இம்முறையும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதால் கார் பந்தயத்திற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கார் பந்தயம் நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.
நிபந்தனைகள்:
1. பந்தயம் நடப்பதற்குள் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) சான்றிதழை கட்டாயம் வாங்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகி விடும்.
2. திருப்பி விடப்பட்ட போக்குவரத்தில் மக்களுக்கு எந்தவித அசவுகரியுமும் ஏற்படக் கூடாது.
3. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் மருத்துவமனைக்குக் செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது.
மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற இருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் முதல் சுற்று ஏற்கனவே இருங்காட்டுக்கோட்டையில் நடந்து முடிந்து விட்டது. இரண்டாவது சுற்று சென்னையிலும், மூன்றாவது சுற்று கோவையிலும், நான்காவது சுற்று கோவாவிலும் மற்றும் ஐந்தாவது சுற்று கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கின்றன. இன்று சென்னையில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியிலும் 2 இந்தியர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 32 பேர் பங்கேற்கின்றனர். 25 நிமிடங்கள் நடைபெறும் கார் பந்தயத்தில் முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும். ஐந்து சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெறுபவர் தான் ஃபார்முலா 4 கார் பந்தயக் கோப்பையைக் கைப்பற்றுவார்.
போக்குவரத்து மாற்றங்கள்:
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கார் பந்தய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. இரண்டு நாட்களுக்கு மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் 3.7 கிமீ சுற்று வட்டத்தில் சென்னைத் தீவுத்திடலில் நடக்க இருக்கிறது. இதற்காக போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது சென்னை மாநகரப் போக்குவரத்து காவல் துறை.
தடை விதிக்கப்பட்ட வாகனங்கள்:
கார் பந்தயம் நடைபெறுவதையொட்டி பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலைச் சுற்றியிருக்கும் பிரதான சாலைகளில் செல்லத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றத்தையும் செய்துள்ளனர். இதன்படி தெற்கு திசையில் இருந்து காமராஜர் சாலையில் போர் நினைவிடத்தை நோக்கி வரும் வாகனங்கள் வாலாஜா சாலை, அண்ணா சாலை, பெரியார் சிலை வழியாக சென்னை சென்ட்ரலை அடைந்து ஈவிஆர் சாலை வழியாக செல்லலாம்.
கொடி மரச் சாலை மற்றும் சிவானந்த சாலை ஆகிய இரண்டு சாலைகளும் முற்றிலுமாக மூடப்படும்.
மவுண்ட் ரோடில் வாலாஜா பாயிண்டை நோக்கி வரும் வாகனங்கள், பல்லவன் சாலை வழியாக சென்னை சென்ட்ரலை நோக்கி திருப்பி விடப்படும்.
வட திசையில் காமராஜர் சாலையில் இருந்து சாந்தோம் நோக்கி வரும் வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்ட்ரலில் இருந்து பல்லவன் சாலை வரை வாகனங்கள் எப்போதும் போல செல்லலாம். அங்கிருந்து பெரியார் சிலை வரையிருக்கும் ஒருவழிப் பாதையானது இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
முத்துச் சாமி சந்திப்பில் இருந்து கொடி மரச் சாலை மற்றும் அண்ணா சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்னை சென்ட்ரல் மற்றும் பெரியமேடு காந்தி இர்வின் வழியாகச் சென்று தாங்கள் சேர வேண்டிய இடத்தை அடையலாம்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு ஸ்பான்சர் செய்ய சில தொழிலதிபர்களிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட பல தொழிலதிபர்கள் தாங்களாகவே முன்வந்து ஸ்பான்சர்ஷிப் அளித்துள்ளனர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெற இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை என்றாலும், மக்கள் பயன்பாட்டிற்கான சாலைகள் கார் பந்தயத்திற்காக மூடப்படுவது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.