பிரெஞ்ச் ஓபன் கோப்பை வென்ற ரஷ்ய டீனேஜரான மிரா ஆண்ட்ரீவா!

French Open womens singles final
Mirra Andreeva Maja Chwalinskaimage credit:Rollandgarros
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

நடைபெற்று வந்த பிரெஞ்சு ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவை சேர்ந்த 19 வயது நிரம்பிய இளம் வீரங்கனையான மிரா ஆண்ட்ரீவா வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் போலந்தின் மஜா ச்வாலின்ஸ்காவை எதிர்கொண்டு, தனது துணிச்சல் மிக்க ஆட்டத்தினை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாக கருதப்படுவது பிரெஞ்சு ஓப்பன் தொடர் தான். ஜூன் 6, சனிக்கிழமையன்று இந்த பிரெஞ்ச் ஓபன் தொடரில் (ரோலண்ட் கேரோஸ்) மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா போலந்து நாட்டைச் சேர்ந்த மஜா ச்வாலின்ஸ்காவை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.

விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் தொடக்கத்தில் மஜாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் மிரா ஆண்ட்ரீவா சிறிது தடுமாறினாலும், விரைவிலேயே மீண்டு வந்து தனது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த தொடங்கினார். மஜா நல்ல எதிர்ப்பை காட்டினாலும் சிறிதாக ஆட்டத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் மிரா கொண்டு வந்தார். களிமண் மைதானத்தில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்ற மிராவிற்கு ஆட்டத்தின் போக்கினை தன் வசப்படுத்த தெளிவான வாய்ப்பு கிடைத்தது. மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு , அதிரடியான ஷாட்களை அடித்து முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார்.

இரண்டாவது செட் தொடங்கியதில் இருந்தே மிராவின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்தது. மஜா ச்வாலின்ஸ்காவின் சர்வீஸ்களை அடுத்தடுத்து வெற்றிகரமாக திசை திருப்பி, ஒரு கட்டத்தில் 5–0 என்ற அளவில் வலுவான ஆதிக்கத்தை செலுத்தினார். வெற்றி விளிம்பிற்கு மிரா சென்றாலும் தனது போராட்ட குணத்தினை மஜா கைவிடவில்லை. அடுத்தடுத்து இரு கேம்களை மஜா வென்று அதிரடி காட்டினாலும் மிராவின் அதிரடியும் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

ஆட்டத்தின் போக்கு 5-2 என்ற கணக்கில் மாறினாலும் , மிரா நிதானமாக விளையாடி மஜாவிற்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பினை வழங்காமல் 6–2 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். இறுதியாக 6-3, 6-2 என்ற புள்ளி கணக்கில் பிரஞ்சு ஓப்பன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று தனது முதல் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தினை வென்றார். பிரெஞ்சு ஓப்பன் சாம்பியனை கைப்பற்ற மிரா ஆண்ட்ரீவாவிற்கு வெறும் 1 மணி நேரம் 22 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட இரு வீராங்கனைகளுமே டென்னிஸ் உலகத்திற்கு புத்துணர்ச்சியை ஊட்டி உள்ளனர். டீனேஜரான ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவா , மகளிர் டென்னிஸ் சங்க (WTA) தொடர்களில் சிறப்பாக விளையாடி அசத்தி வந்துள்ளார். களிமண் மைதானங்களில் துல்லியமாக ஷாட் அடிக்கும் இவரது திறமையும் நிதானமும் வெற்றிக் கோப்பையை இளம்வயதிலேயே பரிசளித்துள்ளது.

அதே வேளையில் இறுதிவரைக்கும் போராடிய போலந்து நாட்டின் மஜா ச்வாலின்ஸ்காவையும் குறைத்து மதிப்பிட முடியாது. டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனைகள் பலரையும் வீழ்த்திய பின்னர் தான், அவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் டென்னிஸ் போட்டிகளில் புதிய முகங்கள் தங்களது ஆதிக்கத்தை முன்னெடுக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com