கெய்க்வாட் – கான்வே அபார தொடக்கத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே அணி!

கெய்க்வாட் – கான்வே அபார தொடக்கத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே அணி!
Published on

டைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின்67வது லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டு ஆடியது. டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் டெல்லி அணியின் பந்து வீச்சை சந்தித்து நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த இருவரும் அரை சதமடித்து 15 ஓவர்கள் வரை டெல்லி அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி சிஎஸ்கேவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் ருதுராஜ் 50 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த சிவம் துபே 9 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட்  ஆனார்.

மறுபுறம் நிதானமாக ஆடி வந்த கான்வே 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதி நேரத்தில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளைச் சந்தித்து 3 பவுண்டரி 1 சிக்சருடன்20 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.

அடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்கோடு ஆட வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. பிரித்திவி ஷா 7 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், அடுத்து வந்த சால்ட்டும் 3 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ஆட வந்த யாஷ், டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கொஞ்சம் பொறுமையாக ஆடி 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், யாஷ் 15 பந்துகள் சந்தித்து 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் அக்சர் படேல் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இப்படி அமன்கான் 9 பந்துகளில 7 ரன்கள், யாதவ் 12 பந்துகளில் 6 ரன்கள், குல்தீப் யாதவ் டக் அவுட் என டெல்லி கேப்பிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் மைதானத்தை விட்டு அணிவகுப்பு நடத்தினர்.

டெல்லி அணியின் விக்கெட்டுகள் இப்படி சரிந்து கொண்டிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனி ஒருவராக நின்று போராடிக் கொண்டிருந்தார். இவர் 58 பந்துகளைச் சந்தித்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 86 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்களின் முடிவில்  டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் சார்பில் தீபக் சஹர் 3 விக்கெட்டுகளையும் பதிரான மற்றும் தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் 8வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி 17 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை தக்கவைத்துக்கொண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com