இரத்தம் கொடு, வாழ்வைப் பகிர்.

ஜூன் 14 - உலக இரத்த தானம் தினம்!
இரத்தம் கொடு, வாழ்வைப் பகிர்.
Published on

ஜூன் மாதம் 14ஆம் தேதி உலக இரத்ததான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இரத்த தானத்தின் தேவையை வலியுறுத்தவும், மற்றவர் உயிர் காப்பதற்காக தானாக முன் வந்து இரத்த தானம் செய்யும் நல்லோருக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்திற்கு கருப்பொருள் இருக்கும். 2023ஆம் ஆண்டின் கருப்பொருள் “இரத்தத்தைக் கொடுங்கள், ப்ளாஸ் மாவைக் கொடுங்கள், வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதாகும். 2022ஆம் ஆண்டின் கருப்பொருள் “இரத்த தானம் என்பது ஒற்றுமையின் செயல், இந்த முயற்சியில் இணைந்து உயிர்களை காப்பாற்றுங்கள்.” என்பது.

ஆஸ்டிரியாவைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர், 1909ஆம் ஆண்டில், இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுவின் தன்மையைப் பொருத்து, மனித உடலில் ஓடும் இரத்தத்தை ஏ, பி, ஏபி, ஒ என்று வகைப்படுத்தினார். இதற்காக அவருக்கு 1930வது வருடம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுவில் புரதச் சத்து இருந்தால் பாஸிட்டிவ் என்றும், புரதச் சத்து இல்லையென்றால் நெகட்டிவ் என்றும் வகைப்படுத்தினர். ஆகவே மொத்தம் எட்டு வகையான இரத்தப் பிரிவுகள் உண்டு – ஏ ப்ளஸ், ஏ மைனஸ், பி ப்ளஸ், பி மைனஸ், ஏபி ப்ளஸ், ஏபி மைனஸ், ஒ ப்ளஸ், ஒ மைனஸ். இந்த விஞ்ஞானி பிறந்தது 1868ஆம் வருடம், ஜூன் 14ஆம் தேதி. அவரை கௌரவிக்கும் விதமாக அவர் பிறந்த நாளை உலக இரத்ததான தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

இரத்ததானம் பற்றிய தவறான கருத்துகள் நிலவுகின்றன:

1. இரத்ததானம் செய்வது வலி ஏற்படுத்தும். இது முற்றிலும் தவறான நம்பிக்கை. ஊசி குத்தும் சிறிய கிள்ளுதல் தான் இருக்கும். சிலருக்கு லேசாக மயக்க உணர்வு, தலை லேசாக இருப்பதைப் போன்ற உணர்ச்சி ஏற்படலாம்.

2. இரத்தம் எடுப்பதற்கு நேரம் அதிகமாகிறது. ஆகையால் தானம் செய்ய முடிவதில்லை. தவறு. 30 அல்லது 40 நிமிடங்களில் முடிந்து விடும். உங்களது உடல் இரத்தம் கொடுக்க ஏதுவாக உள்ளதா என்றரிய மருத்துவப் பரிசோதனை செய்வர். இரத்தம் எடுத்த பின் அதனால் பின் விளைவுகள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்ய சிறிது நேரம் காத்திருக்கச் சொல்வர்.

3. வயதானவர்கள் இரத்தம் கொடுக்கக் கூடாது. தவறு. 17 வயதிற்கு மேற்பட்ட எவரும் இரத்த தானம் செய்யலாம். வயது உச்ச வரம்பு இல்லை.  தீவிர நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் தானம் செய்ய இயலாது.

4. இரத்த வங்கியில் இரத்தம் பல நாட்கள் வைத்திருக்க முடியும். இல்லை. இரத்தத்தின் ஒவ்வொரு கூறும் இத்தனை நாள் வைத்திருக்க முடியும் என்ற வரையறை உண்டு. சிவப்பணுக்கள் குளிர்சாதன அறையில் 42 நாட்கள் வைக்கலாம். ப்ளேட்லெட் என்ற அணுக்கள் சாதாரண தட்ப வெட்ப நிலையில் 5 நாட்கள் இருக்கும். உறைந்த ப்ளாஸ்மா ஒரு வருடம் வைக்கப்படும்.

5. வருடத்தில் ஒரு முறைதான் இரத்ததானம் செய்யலாம். தவறான கருத்து. இரத்த தானம் செய்த 24 மணி நேரத்தில் நம் உடலில் ப்ளாஸ்மா பழைய நிலையை அடையும். 4 அல்லது 6 வாரத்திற்குள் சிவப்பணு முந்தைய நிலைக்குத் திரும்பி விடும். தானம் செய்த 56 நாட்களுக்கப்புறம் மறுமுறை தானம் செய்யலாம்.

நாம் ஏன் இரத்ததானம் செய்ய வேண்டும்.

1. ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் இரத்த அலகுகள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

2. இரண்டு நொடிக்கு ஒருமுறை எங்கேனும் ஒருவர் உயிர் பிழைக்க இரத்தம் தேவைப்படுகிறது.

3. ஒரு உயிரைக் காப்பாற்ற 150 மில்லி லிட்டர் இரத்தம் போதும்.

4. ஒருவர் இரத்த தானம் செய்யும் போது 350லிருந்து 450 மில்லி லிட்டர் தானம் செய்கிறார். அவர் அளிக்கின்ற  இரத்தம் மூன்று உயிரைக் காப்பாற்றுகிறது.

5. ஆரோக்கியமான மனிதனின் உடலில் ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது.

இரத்த தானம் செய்வோம், உயிர் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com