ஃபிடே செஸ்: காலிறுதியில் கார்ல்சனை எதிர்கொள்ளும் குகேஷ்!

ஃபிடே செஸ்: காலிறுதியில் கார்ல்சனை எதிர்கொள்ளும் குகேஷ்!

லகக்கோப்பை ஃபிடே செஸ் போட்டியின் காலிறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்ஸனை சந்திக்கிறார். முன்னதாக, குகேஷ் சீனாவின் வாங் ஹாவ் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. மற்றொரு காலிறுதிப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்யானந்தா மற்றும் அர்ஜுன் எரிகாஸி இருவரும் மோதுகின்றனர். முதல் ஆட்டத்தில் கறுப்பு காய்களுடன் ஆடிய குகேஷ், சீன வீரர் வாங்கை வென்றார். எனினும், இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனிடையே மாக்னஸ் கார்ல்சன், உக்ரைன் நாட்டு வீரர் வாஸில் இவான்சுக்கை 2 - 0 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து அவர் கால் இறுதிக்கு முன்னேறினார். அதையடுத்து பேசிய, கார்ல்சன், ‘காலிறுதிக்கு முன்னேறியதில் மகிழ்ச்சி. இந்திய செஸ் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக குகேஷ் சிறப்பாக ஆடுகிறார். அவரை காலிறுதியில் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார்.

மற்றொரு இந்திய வீரரான பிரக்யானந்தா கடுமையாகப் போராடி ஹங்கேரி வீரர் பெரன் பெர்க்ஸை 43வது நகர்த்தலில் வெற்றி கண்டார். பெர்க்ஸ் தடுத்து விளையாடியபோதிலும் 21வது  நகர்த்தலுக்குப் பிறகு பிரக்யானந்தாவின் கையே ஓங்கியிருந்தது. இந்த வெற்றியை அடுத்து உலக தரவரிசையில் 24வது இடத்தைப் பிடித்துள்ளார் பிரக்யானந்தா. உலக தரத்தில் முதல் 25 இடங்களில் இடம்பெற்றுள்ள நான்காவது வீரர் பிரக்யானந்தா ஆவார்.

இதுகுறித்து பேசிய பிரக்யானந்தா, ‘இன்றைய போட்டி டைபிரேக்கரில் முடியக்கூடாது. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற உறுதியுடன் விளையாடினேன். மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாட நினைத்தேன். நான் அப்படி ஆடினேனா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சிதான்’ என்று கூறினார்.

காலிறுதி போட்டியில் பிரக்யானந்தா, ஸ்வீடன் நாட்டு வீரர் நில்ஸ் கிராண்டிலஸை டிராவின் மூலம் தோல்வியுறச் செய்த எரிகாஸியை எதிர்கொள்கிறார். ‘வேறு நாட்டு வீரரை சந்திக்க நேரிடும் என நினைத்தேன். ஆனால், எனது சக வீரரும், நண்பருமான எரிகாஸியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போட்டி கடுமையாக இருந்தாலும் தொழில் ரீதியில் அவரை எதிர்கொள்ள வேண்டியதுதான்’ என்றார் பிரக்யானந்தா.

மகளிர் பிரிவில் விதித் மற்றும் ஹரிகா துரோணாவல்லி காலிறுதியில் மோதுகின்றனர். முன்னதாக நடைபெற்ற  ஆட்டத்தில் விதித், ரஷிய வீராங்கனை இயான் நெபோம்னியாசிட்சியுடன் டிரா செய்தார். ஹரிகா - ரஷிய வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினா இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com