
இந்திய அணி வீரரும் ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா, இந்த மாதம் 29 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், நவம்பர் 2 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியிலும் விளையாடமாட்டார். கடந்த 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் இன்னும் குணமடையாததே இதற்கு காரணமாகும்.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இடது கணுக்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்புக்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்னும் சிகிச்சை முடிந்து பந்துவீச்சு பயிற்சியை தொடங்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புனேயில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மூன்று பந்துகளை மட்டுமே வீசிய ஹர்திக் பாண்ட்யா, பேட்ஸ்மென் அடித்த பந்தை தடுக்க முற்பட்டபோது அவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக உதவியாளர் ஒருவர் உதவியுடன் களத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
கடந்த 22 ஆம் தேதி நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியின்போது அவர் இந்திய அணியுடன் தர்மசாலாவுக்குச் செல்லவில்லை. அவர் பெங்களூருவுக்குச் சென்று அங்குள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஹர்திக், பாண்ட்யா, லக்னெளவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.
இந்திய அணியின் நிர்வாகக் குழுவும் அவசரகோலத்தில் அவரை இந்திய அணியில் சேர்க்க விரும்பவில்லை. கணுக்கால் காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடையட்டும் என காத்திருக்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. கணுக்காலில், தசைப்பிடிப்பு (சுளுக்கு) மட்டும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர், இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளை தவறவிடுவார் என்று சொல்லப்படுகிறது.
நியூஸிலாந்து எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாத நிலையில் அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் பேட்ஸ்மென் சூர்யகுமார் யாதவும் இடம்பெற்றார். ஷமி அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் 5 வெற்றிகள் மூலம் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. அரையிறுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது.
------------