
பிரபலங்கள் அணிந்து வரும் பொருட்கள் எந்த பிராண்ட் என்பதை அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அலாதி பிரியம். அதுமட்டுமின்றி அதை இணையத்தில் வைரலாக்கி விடுவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. தற்போது வைரலானது வேறு யாரும் இல்ல. நம்ம ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான். அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததை விட, போட்டியின் போது ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருந்த கைகடிகாரம் தான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆடம்பர கடிகாரங்கள் மீது ஹர்திக் பாண்டியாவுக்கு அளவுகடந்த காதல் உள்ளது அனைவருக்கும் தெரியும். இவரிடம் உலகின் முன்னணி நிறுவனங்களில் தயாரித்த அனைத்து வகையான கைகடிகாரங்கள் உண்டு. இவற்றின் விலை கணக்கிட முடியாதது.
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை குரூப் ஏ போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 8 ஓவர்களில் 31 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 200 சர்வதேச விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். போட்டியின் போது, ஹர்திக் தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் இவர் வீழ்த்திய விக்கெட்டை விட இவரது கைகடிகாரம் சமூக ஊடக தளங்களில் ரசிகர்களின் விவாதங்களின் மையமாக மாற்றியது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் அவர் கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தின் விலை.
இவர் ரிச்சர்ட் மிலே நிறுவனத்தில் RM 27-02 வகையிலான கைகடிகாரத்தை அணிந்திருந்தார். இந்த கைகடிகாரத்தின் விலை 800,000 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.6.92 கோடியாகும். நவீன அதிநுட்பமான டிசைன் செய்யப்பட்ட இந்த கைகடிகாரம் உலகளவில் எங்கும் கிடைப்பது அரிதானது.
இந்த கைகடிகாரத்தின் பேஸ் மட்டும் கார்பனால் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எவ்வளவு அதிர்வுகளையும் தாங்க கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி லக்சூரி வாட்ச் சந்தையில் இதுவே டாப் பிராண்ட் என்று பலரும் கூறி வருகின்றனர். இதுபோன்ற கைகடிகாரங்கள் இதுவரை 50 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான கைகடிகாரங்களை விராட் கோலி ஏற்கனவே அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய கடிகாரம் முதலில் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காக வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற பல பிரபலங்களும் இந்த வகையான கைகடிகாரங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.