

அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தாலும் ஹர்மன்பிரித் கவுர் கேப்டன் பதவியில் தொடர்வார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதி தோல்வியுற்றதால் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்திய மகளிர் அணியின் சாம்பியன் கனவுகள் இங்கிலாந்து மண்ணில் கரைந்து போனது.
முன்னதாக ஆடவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின், மகளிர் அணியினர் அரையிறுதி வரை செல்வதே மிகவும் கடினம் என்று திருவாய் மலந்திருந்தார். அவரது வாக்கை போல இந்திய அணியும் செயல்பாட்டில் கோட்டை விட்டது. மகளிர் அணியை பொறுத்த வரையில் லீக் சுற்றுகளில் அவர்களின் செயல்பாடு நன்றாக இருந்தாலும் பவுலிங்கில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
B பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்தியா போன்று 3 போட்டிகளில் தான் வென்றுள்ளது. ரன் ரேட் விகிதப்படி இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. ஆயினும் அதன் அதிர்ஷ்டம் B பிரிவில் சென்றது தான்.
இந்த உலகக் கோப்பையில் இந்தியா மட்டுமல்லாமல் துணைக் கண்டத்தை சேர்ந்த பாகிஸ்தான் , பங்களாதேஷ் , இலங்கை உள்ளிட்ட அணிகளும் முன்னதாக வெளியேறிவிட்டன. சொல்லப்போனால் ஆசியக் கண்டத்தை சேர்ந்த எந்த ஒரு அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட இந்திய அணியும் 2 போட்டிகளில் தோற்றதால் வெளியேறியது.
இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மகளிர் அணி விளையாட உள்ளது. டி20 உலகக் கோப்பை தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் கேப்டனை மாற்றும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றுள்ளது.
நீண்ட காலம் சாதாரண அணியாக இருந்த இந்திய அணியை மேம்படுத்தி உலகக்கோப்பை இறுதி வரை கொண்டு சென்றவர் மிதாலி ராஜ். அவர் ஏற்றிய நெருப்பை அணைய விடாமல் ஹர்மன் பார்த்துக் கொண்டார். மிதாலியின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் விதமான கடின உழைப்புடன் செயல்பட்டு ஒருநாள் உலகக் கோப்பையை கடந்த ஆண்டு வென்று காட்டினார். அவரது கடின உழைப்பு , அர்ப்பணிப்பு உணர்வு , தலைமைப் பண்பு ஆகியவை இந்திய அணியை செம்மையாக்கி உள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜப்பானில் ஐச்சி-நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கு முன்னர் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்த அணி சாம்பியன் பட்டம் வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பின்படி , 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர்வார். துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா இருப்பார். மற்ற வீராங்களைகள் ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் , ஜி. கமாலினி, பார்தி ஃபுல்மாலி, ஸ்ரீ சாரணி, , ரேணுகா ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆசியக் கோப்பைக்கு முன்னதாக ஜூலை 10 ஆம் தேதி, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.