
டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில், ஒரே இன்னிங்சில் மூன்று சதங்கள் எடுத்த நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அவற்றில் மூன்று சதங்களை குறித்து இங்கு காணலாம்.
கிரிக்கெட் உலகில் தனி சரித்திரம் படைத்த ஆஸ்திரேலிய ஆட்டக்காரர் டான் பிராட்மேன் கேப்டனாக இருந்து, 1938ல் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட்.
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக லென் ஹட்டனும், பில் எட்ரிட்ச்சும் களம் இறங்கினர். எட்ரிட்ச் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், அடுத்து வந்தவர் மவுரிச் லேலண்ட். ஹட்டனும், இவரும் ஜோடி சேர்ந்து ஆடிக் கொண்டே இருந்தனர். லென் ஹட்டன், ஸர் டான் பிராட்மேனின் அன்றைய கால கட்டத்தின் (1930ல்) அதிக பட்ச ஸ்கோரான 334 ரன்களையும், அடுத்து வால்லி ஹாம்மண்டின் 336 (1933ல்) ரன்களையும் பின்னுக்குத் தள்ளி 364 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்நிலையில், அன்றைய கால கட்டத்தில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெயரையும், உலக சாதனையையும் படைத்தார் லென் ஹட்டன். கிட்டத்தட்ட அடுத்த 20 ஆண்டுகள் லென் ஹட்டன் அந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டார்.
அந்த குறிப்பிட்ட இன்னிங்சில் மவுரிஸ் லேலண்ட் 187 ரன்கள் ஜோய் ஹார்ட்ஸ்டாப் 169 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணியின் மொத்த ரன்கள் 903 ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு டிக்ளேர் செய்தனர். ஆஸ்திரேலிய அணி தாக்குப் பிடித்து சரி வர விளையாடததால், பாலோவான் பெற்று, தோல்வியை தழுவியது.
டான் பிராட்மேனுக்கு எதிராக ஆடிய டெஸ்ட் மேட்சில்தான் லென் ஹட்டன் இந்த சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த டெஸ்டில் பிராட்மேனால் பந்து மட்டும் தான் வீச முடிந்தது. அதுவும் 2.2 ஓவர்கள் மட்டும். துரதிர்ஷ்டவசமாக டான் பிராட்மேனுக்கு காயம் ஏற்பட்டதின் காரணமாக அவரை மைதானத்திலிருந்து தூக்கி சென்றார்கள். இரண்டு இன்னிங்சிலும் டான் பிராட்மேன் பேட்டிங் செய்யவில்லை. அதே மாதிரி பேட்டிங் ஆடாமல் அவருக்கு கம்பெனி கொடுத்த மற்றொரு ஆட்டக்காரர் ஜாக் பின்கில்ட்டன். இந்த மேட்ச் ஆறு நாட்கள் நடைபெற்றன.
லென் ஹட்டனின் 364 ரன்கள் ரிக்கார்டை 1958ல் மேற்கு இந்திய கிரிக்கெட் வீரரான காரி சோபர்ஸ் முறியடித்தார். அந்த சாதனையை பார்ப்பதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் ஹனீஃப் முஹம்மதுவின் மூன்று சதத்தை காண்போம்.
ஜனவரி 1958: மேற்கு இந்திய மண்ணில் பிரிட்ஜ் டவுன் பகுதியில் நடந்த ஆட்டம். பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் மேற்கு இந்திய அணி 579 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. ஹண்ட் (142), வீக்ஸ் (196) ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியால் மொத்தம் 106 ரன்களே எடுக்க முடிந்தது. பாலோவான் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 657 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. மேட்ச் டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் அணியின் ஹீரோவும், ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான ஹனீஃப் முஹம்மத் 337 ரன்கள் எடுத்தார். இந்த 337 ரன்கள் குவிக்க ஹனீஃப் எடுத்துக் கொண்ட நேரம் 970 நிமிடங்கள். நடுவில் ஒரு நாள் ஒய்வு நாளை தவிர இந்த டெஸ்ட் ஆறு நாட்களுக்கு ஆடப்பட்டது.
1958 மார்ச் மாதம்: சபீன்னா பார்க் மைதானம். காரி சோபர்ஸ் டெஸ்ட் சரித்திரத்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அது சரித்திர நிகழ்வாக மாறியது. அவர் எடுத்த முதல் சதமே, மூன்று சதம். இந்த சாதனையை படைக்கும் பொழுது ஏற்பட்ட மற்றுமொரு சாதனை, அப்பொழுதிய அதிகபட்ச ஸ்கோர் ஆன லென் ஹட்டனின் 364 ரன்களும், சோபார்சின் 365 நாட் அவுட்டால் முறியடிக்கப்பட்டது.
சோபர்ஸுக்கு 614 நிமிடங்கள் தேவைப்பட்டது. அதில் 38 பவுண்டரிகள் எடுக்கப்பட்ட நிலையில், ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை.
இந்த உலக சாதனை 36 வருடங்களுக்கு பின் 1994ல் பிரெயின் லாராவால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய தினம் ஸர் காரி சோபர்ஸ் நேரில் மைதானத்தில் இருந்து, உலக சாதனைப் படைத்த லாராவை கட்டி தழுவி வாழ்த்தினார்.
1958 சுற்றுப் பயணத்தில் மட்டும் தான் இரண்டு பேட்ஸ்மன்கள் தலா மூன்று சதங்கள் குவித்து சாதனைப் படைத்தனர். ஹனீஃப் முஹம்மத் (337), காரி சோபர்ஸ் (365 நாட் அவுட்).
காரி சோபர்ஸ் 365 நாட் அவுட் எடுத்த மேட்சில் பாகிஸ்தானுக்காக 106 ரன்களை வாசீர் முஹம்மத், மேற்கு இந்திய அணிக்காக 260 ரன்கள் ஹண்ட் எடுத்தனர்.