வெயில் காலம் துவங்கிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் வெயில் வாட்டி எடுக்கப்போகிறது. இந்த வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.
வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.
வெள்ளரி விதை சரும வறட்சியை போக்கி உடலை பளபளப்பாக வைக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் உடலின் தசை நார்கள், குருத்தெலும்பு, தசை நாண்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
வெள்ளரிக்காயை சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் குறையும். வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு வயிற்று புண்ணும் ஒரு காரணமாக இருக்கும். வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமடையும்.
வெள்ளரிச்சாறு இரைப்பை மற்றும் குடல் புண்கள், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து, இளமையான தோற்றத்தை கொடுக்கிறது.
தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சீராக நடப்பதற்கு உதவுகிறது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரக கல் கொண்டிருப்பவர்களுக்கு அரிசி சாதத்துடன் வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்து கொடுப்பது நல்ல பலன் தரும்.
வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும்.
உடல் ஏற்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க நினைப்ப வர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும்.