நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சைனாவின் ஹாங்சு நகரில் நடந்து முடிந்திருக்கிறது. 28 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா மொத்தமாக 107 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 2018ஆம் வருடப் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் வரிசையில் 8வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தூரக் கிழக்கு சாம்பியன்ஷிப் விளையாட்டுகள் முதன் முதலில் 1913ஆம் வருடம் மணிலாவில் நடைபெற்றது. மொத்தம் ஆறு நாடுகள் பங்கேற்றன.1934ஆம் வருடம் வரை இந்த விளையாட்டுப் போட்டிகள் பத்து முறை நடைபெற்றன. ஜப்பான் மற்றும் சைனாவிற்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், 1938ஆம் வருடம் இந்த போட்டி நிறுத்தப்பட்டது.
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் 1948அம் வருடம் லண்டனில் கோடை ஒலிம்பிக்ஸ் போட்டி நடந்தது. அப்போது நடைபெற்ற கூட்டத்தில், தூரக் கிழக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பிக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இந்தியாவின் ஒலிம்பிக் கமிட்டி பிரதிநியாக கலந்து கொண்ட குருதத் சோந்தி, ஆசிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டுப் போட்டி நடத்தலாம் என்ற கருத்தைக் கூறினார். இதற்கு அபரிமிதமான ஆதரவு இருந்தது. 1949 ஆம் வருடம், பிப்ரவரி மாதம், 13ஆம் தேதி டெல்லியில் ‘ஆசிய தடகள கூட்டமைப்பு’ ஆரம்பிக்கப்பட்டது. குறிக்கோள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, ‘ஆசிய விளையாட்டுப் போட்டி’ ஏதாவது ஒரு ஆசிய நாட்டில் நடத்துவது. இந்தப் போட்டிகள் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. 1951ஆம் வருடம் முதல் போட்டியை நடத்த டெல்லி தேர்வானது.
ஆசிய விளையாட்டிற்கான குறிக்கோள் ‘EVER ONWARD’ ‘எப்போதும் முன்னோக்கி’. ஆசிய விளையாட்டிற்கான சின்னத்தை வடிவமைத்தவர் குருதத் சோந்தி அவர்கள். அந்த சின்னம் 16 கதிர்களுடன் சிவப்பு நிறத்தில் ஒளிரும் சூரியன், அதன் நடுவில் வெள்ளை வட்டம். இந்த வட்டம் எப்போதும் ஒளிரும் ஆசிய மக்களின் நட்புத் தன்மையை எதிரொலிக்கிறது.
1982ஆம் வருடம் இந்தியாவில் டெல்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, எந்த நாட்டில் போட்டி நடைபெறுகிறதோ அந்த நாட்டின் விலங்கு அல்லது மனித உருவம் சின்னமாக வைக்க முடிவு செய்யப்பட்டது. 1982ஆம் வருட போட்டியின் சின்னம் ‘அப்பு’ என்ற யானை. தற்போது முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் சின்னம் 'மூன்று எதிர்கால ரோபோ கதாபாத்திரங்கள்’.
1951ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில், 11 நாடுகள் பங்கேற்றன. 15 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 51 பதக்கங்கள் வென்றது. இதுவரை நடந்த 19 போட்டிகளில், முதல் 8 போட்டிகளில் அதிகப் பதக்கங்கள் வென்றதில் ஜப்பான் முதல் இடத்தில் இருந்தது. 1982 முதல் தற்போது வரை 11 போட்டிகளில் சைனா முன்னணியில் இருந்து வருகிறது. இந்த வருடப் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் 45.
முதலில் நடந்த போட்டியில் 15 தங்கப் பதக்கங்கள் வென்ற இந்தியா, 1962ல் 10, 1978ல் 11, 1982ல் 13 என்று தங்கப் பதக்கங்கள் வென்றது. ஆனால், 1990ஆம் வருடம் பீகிங்கில் நடந்த போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்கள் 23. கபடியில் மட்டும் ஒரு தங்கப் பதக்கம் வென்றது. 2018ல் 16 தங்கப் பதக்கங்கள் வென்ற இந்தியா இந்த முறை 28 தங்கப் பதக்கங்கள் பெற்றது மகத்தான சாதனை எனலாம். அதைப் போல 1951ஆம் வருடம் மொத்தம் 51 பதக்கங்களை வென்ற இந்தியா, 1958 ஆம் வருடம் மொத்தம் 13 பதக்கங்களை மட்டுமே வென்றது. 2018 போட்டியில் 70 பதக்கங்களை வென்ற நம் நாடு, இந்த வருடம் 107 பதக்கங்களை வென்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.