

14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு வந்தன.
சென்னையில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி சுற்றில் ஸ்பெயின் அணி 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
மற்றொரு கால்இறுதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
நேற்று இரவில் அரங்கேறிய கடைசி கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் கோதாவில் குதித்தன. 13-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கேஸ்பர்ட் கார்னெஸ் இந்திய பின்கள வீரர்களை ஏமாற்றி கோலடித்தார்.
அடுத்த அரைமணி நேரம் அவர்களின் கோல்எல்லையை இந்திய வீரர்கள் பலமுறை நெருங்கிய போதிலும் கோலாக்க முடியவில்லை. ஒருவழியாக 45-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ரோகித் கோல் அடிக்க, அதனை தொடர்ந்து 48-வது நிமிடத்தில் ஷர்தானந்த் திவாரி இன்னொரு கோலடித்தார். இதைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்கு அடுத்தடுத்து கிட்டிய பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய கோல் பிரின்ஸ்தீப் சிங் தடுத்து நிறுத்தி அசத்தினார். இந்தியா வெற்றியை நெருங்கி சமயத்தில், ஒரு நிமிடம் எஞ்சியிருந்த போது பெல்ஜியத்தின் நாதன் ரோக்கி பந்தை வலைக்குள் திணித்து அதிர்ச்சி அளித்தார். வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனதால் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது.
இதில் முதல் 4 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 3-ஐ கோலாக்கின. பெல்ஜியத்தின் கடைசி வாய்ப்பில் நிகோலஸ் போகர்ட்ஸ் அடித்த பந்தை இந்திய கீப்பர் பிரின்ஸ்தீப் சிங் முறியடித்தார். அதனை தொடர்நது இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. கோல் கீப்பர் பிரின்ஸ்தீப்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.