சுட்டெரிக்கும் சூரியக் கதிர்வீச்சுகளில் இருந்து நம் கண்களைப் பாதுகாப்பது எப்படி? கண் மருத்துவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்!

சுட்டெரிக்கும் சூரியக் கதிர்வீச்சுகளில் இருந்து நம் கண்களைப் பாதுகாப்பது எப்படி? கண் மருத்துவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்!
Published on

கோடை வெயிலின் தீவிரத்தை நாம் சரியாக கவனிக்காமல் விட்டோம் என்று வையுங்கள் பிறகு அது நம் கண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக மாறி விடும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது தான் கண்களுக்கு கேடயம் அமைத்துக் கொள்வதும் கூட. ஆம், கண்களை சூரிய ஒளியின் ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளில் இருந்து நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். இளங்காலையிலும், அந்தி மாலையிலும் படரக்கூடிய மென்சூரியனைப் பற்றிப் பேசவில்லை. இப்போது நமது கவலை தகிக்கும் நண்பகல் சூரியனைப் பற்றியது.

புற ஊதாக்கதிர்கள் என்பவை அதாவது அல்ட்ரா வயலட் (UV) ஒளி என்பது மின்காந்த கதிர்வீச்சின் ஒரு வடிவமாகும். இது மிகக் குறுகிய அலைநீளத்தைக் கொண்டிருப்பதால் வெறுமே கண்ணுக்குத் தெரிவதில்லை என்றாலும், இது கண் திசுக்களில் ஊடுருவி, பல்வேறு கண் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கக் கூடியதாக விளங்குகிறது.

சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய இத்தகைய புற ஊதா கதிர்கள் மொத்தம் மூன்று வகைகளாகும், அவை முறையே; UVA, UVB மற்றும் UVC.

இவற்றில் UVA கதிர்கள் கண்களுக்குள் ஆழமாக ஊடுருவி நமது மையப் பார்வையை பாதிக்கின்றன. இந்த கதிர்கள் விழித்திரை வரை சென்று மாகுலாவை சேதப்படுத்துகின்றன.

UVB கதிர்கள் மேலோட்டமானவை, ஆனால் இவையும் நம் கண்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு கண்களில் வறட்சி ஏற்படுத்துதல் மற்றும் கார்னியல் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

UVC.. UVA மற்றும் UVB ஐ விட அதிக ஆற்றலை வெளியிடுகிறது ஆனால் அது பெரும்பாலும் பூமியின் ஓசோன் படலத்தால் தடுக்கப்படுகிறது. இது மனித சருமத்தை ஊடுருவினால், அது தோலின் செல் டிஎன்ஏவை சேதப்படுத்தும் என்பதோடு தோல் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும் என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

சன்கிளாஸ்கள் மற்றும் தொப்பி அணிவது UV கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும். மையப் பார்வையை மங்கச் செய்யும் பிங்குலா, கண்புரை, வயது தொடர்பான மாகுலர்

சிதைவு (AMD) போன்ற கண் நோய்கள் மற்றும் பலவற்றைத் தவிர்க்க, கடுமையான வெப்பத்திலிருந்து கண்களைப் பாதுகாப்பது முக்கியம்.

சன்கிளாஸ் அணியுங்கள்...

"குளிர் கண்ணாடிகள் அதாவது சன்கிளாஸ்களை தேர்ந்தெடுக்கும் போது நாம் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும், முழு UV பாதுகாப்பை வழங்கும் அல்லது UV 400 என்று லேபிளிடப்பட்ட கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் கண் மருத்துவர் ஆலோசனை பெற்று பவர் லென்ஸ்கள் உபயோகிக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் எனில் கண்ணாடி தேர்ந்தெடுக்கும் போது, டிரான்சிஷன் அல்லது ஃபோட்டோ க்ரோமடிக் லென்ஸ்களுக்குச் செல்லுங்கள் என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

தொப்பி அணிந்துகொள்ளுங்கள்...

நீங்கள் சூரிய ஒளியில் இருக்கும்போது, சூரியனின் பெரும்பாலான கதிர்களைத் தடுக்கும் வகையில் ஒரு தொப்பியை அணியுங்கள். "அகலமான விளிம்புகள் கொண்ட தொப்பியை அணிவது சிறந்தது, குறிப்பாக குழந்தைகளுக்கு, தொப்பியானது சூரியனின் பெரும்பாலான கதிர்களை கண்களை அடைவதைத் தடுக்கிறது"

- என்று பெரும்பாலான கண் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நேஷனல் ஐ இன்ஸ்டிடியூட் வலியுறுத்தலின்படி, கடும் கோடை காலங்களில் சன்கிளாஸ்கள் மற்றும் தொப்பி அணியும் பழக்கமானது UV கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும்.

லென்ஸைச் சுற்றி வெளிச்சம் வராமல் தடுக்கும் சன்கிளாஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதே போல உங்கள் கண்களை நிழலிடும் மற்றும் கண்ணை கூசும் தன்மையை குறைக்கும் அகலமான, இருண்ட விளிம்பு கொண்ட தொப்பியைத் தேர்வு செய்யவும்.

கண்களைப் பாதுகாப்பதில் முக்கியமான மற்றொரு விஷயம் பீக் ஹவர்ஸில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்

மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரியனின் தாக்கம் வெகு அதிகமாக இருக்கும், அந்த நேரங்களில் நீங்கள் வெளியில் இருந்தால் வெயிலின் தாக்கம் உங்கள் கண்களில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். புற ஊதா கதிர்வீச்சைத் தவிர்க்க இந்த நேரத்தில் வெளியில் நேரடியாக சூரியனின் தாக்கத்தில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

உச்சி வெயிலில் சூரியனை ஒருபோதும் நேரடியாகப் பார்க்காதீர்கள்

சூரியனை நேரடியாகப் பார்ப்பது மாகுலர் துளைகள் மற்றும் பிற விழித்திரை நோய்களுக்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com