டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு பென் ஸ்டோக்ஸ் ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு தூண்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு பல ஆண்டுகளாக முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ரோஹித் ஷர்மா, தனது அதிரடியான பேட்டிங்கிற்காகவும், கேப்டன்ஷிப் திறனுக்காகவும் அறியப்படுகிறார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்தார். அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்களை எடுத்துள்ளார். இவர்களின் ஓய்வு இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
ரோஹித் மற்றும் விராட் இல்லாமல் இந்திய டெஸ்ட் அணி எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இப்படியான நிலையில், விராட் மற்றும் ரோஹித் இருவரும் ஓய்வறித்த பிறகு இந்திய அணி விளையாடவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஐபிஎல் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
மேலும் தற்போது இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை விளையாடுகிறது. அந்தவகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பென் ஸ்டோக்ஸ், “இந்திய அணிக்கு கோலியின் போராட்ட உணர்வு, களத்தில் அவரது போட்டி மனப்பான்மை, வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவை பெரிதும் இழப்பாக இருக்கும். அவர் 18ஆம் எண்ணை தனதாக்கி உள்ளார். இனி மற்றொரு இந்திய வீரரின் முதுகில் இந்த எண்ணை நாம் பார்க்காமல் போகலாம். அவர் நீண்ட காலமாக மிகச் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.
நான் அவருக்கு ஒரு செய்தி அனுப்பினேன். இந்தமுறை அவருக்கு எதிராக விளையாட முடியாமல் போனது பெரும் அவமானமாக இருக்கிறது என்று அனுப்பினேன். அவருக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எங்களுக்கு இடையேயான போட்டியை நாங்கள் எப்போதும் ரசித்தோம், ஏனெனில் களத்தில் எங்களுக்கு ஒரே மனநிலை உள்ளது. அது ஒரு சவாலான போர்," என்று பேசினார்.