கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

நான் விளையாட மாட்டேன்.. ஊருக்குப் போறேன்; ரொனால்டோ கோபம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தன்னை பயிற்சியாளர் அவமதித்ததால், மேற்கொண்டு இப்போட்டித் தொடரில் விளையாடாமல் புறக்கணிக்கப் போவதாக போர்ச்சுகல் அணி கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அறிவித்துள்ளார்.

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, (37) கடந்த 2016-ல் யூரோ கோப்பை தொடரில் அணிக்கு பட்டம் வென்று தந்தார். சிறந்த கால்பந்து விளையாட்டு நட்சத்திரத்திற்கு வழங்கப்படும் 'பாலன் டி ஆர்' விருதை ஐந்து முறை வென்றவர்.

இம்முறை கத்தாரில் நடக்கும் உலக கோப்பை தொடரில் மூன்று லீக் போட்டிகளில் ஒரு கோல் மட்டுமே அடித்தார். சமீபத்திய சுவிட்சர்லாந்துக்கு எதிரான 'ரவுண்ட்-16' போட்டியில் துவக்க 11 வீரர்களில் இவருக்கு பயிற்சியாளர் சான்டோஸ் வாய்ப்பு தரவில்லை. ஒருவழியாக 73-வது நிமிடத்தில் களமிறக்கப்பட்டார்.

உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள ரொனால்டோ, தன்னை பயிற்சியாளர் சான்டோஸ் அவமானப்படுத்தி  விட்டதாக கருதுகிறார். அதனால், இன்று மொராக்கோவுக்கும் போர்ச்சுகலுக்கும் நடக்கவுள்ள காலிறுதிப் போட்டியில் பங்கேற்காமல் புறக்கணிக்கப் போவதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.

இதையடுத்து கத்தாரிலிருந்து கிளம்ப முடிவெடுத்த ரொனால்டோவை, போர்ச்சுகல் அணி பயிற்சியாளர் சமாதானப்படுத்தி, அணியின் நலன் கருதியே ரொனால்டோவை முதலில் களமிறக்கவில்லை என்று கூறியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் போர்ச்சுகல் அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'' ரொனால்டோவின் பங்களிப்பு எங்கள் அணிக்கு  நிச்சயமாக தேவை. இவர் தொடரிலிருந்து விலகிச் செல்ல விட மாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் சகோதரி அவிரோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில்,' சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் வென்றதற்கு கடவுளுக்கு நன்றி.

புதிய திறமையான வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால், மைதானத்தில் ரசிகர்கள் ரொனால்டோவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதை உலகமே பார்த்தது. ரொனால்டோ உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும். அணியின் மீதான நன்றி உணர்வை இவர் இன்னும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரொனால்டோ எடுக்கும் முடிவுக்கு துணையாக இருப்பேன்,' என, தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com