தாய்மைக்காக கிரிக்கெட்டை விட வேண்டாம்! ஐசிசி வெளியிட்ட வரலாற்று சிறப்புமிக்க வழிகாட்டுதல்கள்!

இனி கிரிக்கெட்டும் தாய்மையும் ஒரு தடையல்ல; புதிய விதிகளால் உற்சாகமடையும் வீராங்கனைகள்.
Female cricketers pregnancy Icc policy
womens cricketers pregnancy Getty images
Updated on

தற்போது மகளிர் கிரிக்கெட் பெரிய அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதே நேரம் ஆண்கள் கிரிக்கெட்டிற்கும் பெண்கள் கிரிக்கெட்டிற்கும் ஒரு சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. கிரிக்கெட் வீராங்கனைகள் மகப்பேறு காலங்களுக்கு பின்னர், மீண்டும் அணியில் திரும்ப பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக அவர்களின் உடல் தகுதி மாறுபடுகின்றன.

ஒரு சில சிக்கலான நடைமுறையின் காரணமாக வீராங்கனைகள் தங்களின் தாய்மையை நீண்ட காலம் தள்ளிப் போடுகின்றனர். இது போன்ற தியாகங்களை அவர்கள் விளையாட்டிற்காக செய்ய வேண்டி இருக்கிறது.தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பிரசவத்திற்கு பின் வீராங்கனைகள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி மகளிர் கிரிக்கெட் குழுவினருக்கு மகிழ்ச்சி தரும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாக இருக்கிறது.

கர்ப்ப காலம் ,பிரசவம் அதற்கு பிந்தைய பயிற்சிக் காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களை ஐசிசி வழங்கி உள்ளது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் மருத்துவர் டாக்டர் பிலிப்பா இஞ்ச் தலைமையிலான குழுவினால் இந்த வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ​தயார், மதிப்பாய்வு , ​மீட்டெடு , ​சீரமைத்தல் , திரும்புதல் , ​செம்மைப்படுத்துதல் ஆகிய ஆறு கட்டங்களை இந்த நடைமுறை உள்ளடக்கி உள்ளது. பிரசவ காலத்திற்கு பின்னர் உடல் நலத்தை மீட்டு படிப்படியாக பயிற்சி பெற்று மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் வீராங்கனைகளை பங்கேற்க வைப்பது இதன் நோக்கமாக இருக்கிறது.

​ஐசிசி கவுன்சிலில் உறுப்பினராக உள்ள கிரிக்கெட் வாரியங்கள் அனைத்தும் தங்களது உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டு , சொந்தமாக மகப்பேறு கால கொள்கைகளை உருவாக்க ஐசிசி இந்த அறிவிப்பு முன்னோடியாக இருக்கும். மகப்பேறு காலங்களில் தனியாக ஒரு மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் வீராங்கனையை தொடர்ச்சியாக கண்காணிப்பார். இவர் மகப்பேறு காலம் மற்றும் மீளுதல் பயணத்தில் முக்கிய ஆதரவுகளை வழங்குவார். மருத்துவப் பணியாளர்கள், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உளவியலாளர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களை உள்ளடக்கிய ஒரு குழு கர்ப்பகாலத்தில் போதுமான ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகளையும் வழங்குவார்கள்.

Neha pregnancy
indian female cricketerFemale cricket

பயிற்சி காலங்களில் குழந்தை பராமரிப்பு வசதிகள் மற்றும் பயணத்திற்கான வசதிகள் கிரிக்கெட் வாரியங்கள் வழங்கும். குழந்தையின் பராமரிப்பு நேரத்திற்கு ஏற்ப நெகிழ்வு தன்மையுடன் அவர்களுக்கு பயிற்சி காலம் நடைமுறைப்படுத்தப்படும். மகப்பேற்றினை அறிவிப்பது வீராங்கனை தனிப்பட்ட விருப்பம் , இதில் கிரிக்கெட் வாரியம் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. முதல் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்த பரிந்துரை செய்தாலும் அவர்களின் பங்களிப்பை நிறுத்த காலவரம்பு எதுவும் இல்லை. இது மருத்துவ குழு மற்றும் வீராங்கனையின் ஆலோசனையின் படியே முடிவு செய்யப்படும்.

இந்த திட்டத்தை வடிவமைத்த குழுவிற்கு தலைமை தாங்கிய டாக்டர் பிலிப்பா இஞ்ச், "குழந்தை பிறப்பது என்பது ஒரு வீராங்கனையின் கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அல்ல. ஒவ்வொரு வீராங்கனையும் தேவை தனித்துவமானது அதற்கு ஏற்ப உறுப்பு நாடுகள் வழிகாட்டுதலை பயன்படுத்திக் கொள்ளலாம்"என்று கூறினார்

இது குறித்து ஐசிசியின் தலைவர் ஜெய்ஷா "எந்த ஒரு வீராங்கனையும் தனது நாட்டிற்காக விளையாடுவதற்கும் தாய்மைக்கும் இடையில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய கட்டாயத்திற்கு தள்ளப்படக்கூடாது. மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்கும் அக்கறை கட்டுவதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com