இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள்... பகைமைப் பந்தயங்கள்! பசுமையான சுவாரஸ்யங்கள்!

ICC Men's world cup 2023: IND VS PAK
ICC Men's world cup 2023: IND VS PAK

ந்தியாவில் நடைபெற்றுவரும் 2023ம் ஆண்டுக்கான ஆடவர் ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திவருகின்றன. இந்நிலையில், எப்போது இந்த இரு அணிகளும் மோதிகொள்ளும் என மிகவும் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வெறும் விளையாட்டாக மட்டும் இரு நாட்டு ரசிகர்களால் பார்க்கப்படுவதில்லை. போட்டியில் வெற்றி பெறும் அணியை இரு நாட்டுக்கு இடையில் அவ்வப்போது நடைபெறும் போரில் வெற்றிக்கொண்டதாகவே கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அதேபோல், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும்போது இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டினால் அது பகையை மறந்து ரசிகர்கள் மனதிலும் மகிழ்ச்சியை பூக்கச் செய்யும்.

ICC Men's world cup 2023: IND VS PAK
ICC Men's world cup 2023: IND VS PAK

”இந்தியா, மற்ற எந்த அணியோடு விளையாடித் தோற்றாலும் பரவாயில்லை.  பாகிஸ்தான் அணியிடம் மட்டும் தோற்றுவிடக் கூடாது’.  இதுதான் பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணம்.  பாககிஸ்தான் ரசிகர்களுக்கும் இது பொருந்தும்.  ‘‘மற்ற அத்தனைப் போட்டிகளிலும் தோற்றாலும்  இந்திய அணியை மட்டுமாவது ஜெயித்துவிட வேண்டும்’’  விளையாட்டும் அரசியலும் இரண்டறக் கலந்ததன்  காரணமாக இந்த இரண்டு அணிகள் போட்டியிடும் போதெல்லாம் சில சுவாரசியங்கள் முளை விடுவதுண்டு.  அவற்றில் சிலவற்றை இங்கு அலசுவோம்.

  • 1986ல் நடைபெற்ற ஆஸ்திரேலியா கோப்பை பந்தயம்.  ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸில் வென்ற பாகிஸ்தான் இந்தியாவை முதலில் பேட் செய்யச் சொன்னது.  245 ரன்கள்  எடுத்தது இந்திய அணி.  பாகிஸ்தான் மூன்று விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஜாவேத் மியாந்தாத் களம் புகுந்தார்.  தனி ஒருவராக ரன்களைக் குவித்தார்.  110 ரன்களை எடுத்து விட்டார்.  இந்த நிலையில் ஒரே பந்து மிச்சம் இருந்தது.  அதில் பாகிஸ்தான் அணி நான்கு ரன்களை எடுத்தால் மட்டுமே அதனால் வெல்ல முடியும்.  இந்த நிலையில் சேத்தன் சர்மா வீசிய பந்தை சிக்ஸராக மாற்றிக்காட்டி தன் அணியை வெற்றி பெற வைத்தார் ஜாவேத் மியாந்தாத்.  கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத கடைசிப் பந்து இது.

  • சர்வதேச அளவில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் விளையாடி இருக்கிறார்கள்.  அவர்கள் அமீர் எலாஹி, குல் முகம்மது, அப்துல் ஹஃபீஸ் கர்தார்.  இதற்குக் காரணம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை.  சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியாவுக்காகவும், பாகிஸ்தான் தனி நாடான பிறகு பாகிஸ்தானுக்கும் இவர்கள் விளையாடி இருக்கிறார்கள்.

  • இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை ஆசியக் கோப்பை போட்டிகளில் ஒரு முறை கூட இறுதிச்சுற்றில் மோதிக் கொண்டது இல்லை.

  • இந்தியா தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடியது அக்டோபர் 1, 1978ல் தான் பாகிஸ்தானில் நடைப்பெற்றது இந்தப்போட்டி.  இதில் நான்கு ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

  • 2011ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மேட்சை கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை 6.73 கோடி! இதில் இந்தியா ஜெயித்து உலகக் கோப்பையை வென்றது.

  • 1999ல் டெல்லியில் நடைபெற்ற போட்டியின் போது வக்கார் யூனிஸ் ரன் அவுட்டாக வேண்டும் என்று விரும்பினாராம்.  காரணம் அனில் கும்ப்ளே ஒரு இன்னிங்ஸில் 9 விக்கெட் எடுத்திருந்தார்.  அவர் பத்தாவது விக்கெட்டையும் எடுத்து சரித்திரம் படைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் வக்கார் யூனிஸ் இப்படி விரும்பினாராம்.  இதை அவர் தன் சக பேட்ஸ்மெனான வாசிம் அக்ரமிடம் கூற, அவர் அதை ஒரு பேட்டியில் வெளியிட்டுவிட்டார். (ஆனால் இறுதியில் வக்கார் யூனிஸின் விக்கெட்டும் கும்ப்ளேவுக்குச் சென்றது)

  • சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.  அதில் இன்சமாம் அவுட் ஆனதும் பெவிலியனுக்குத் திரும்பி வந்தபோது ஒரு ரசிகரை தன் பேட்டால் அடித்திருக்கிறார்.  அவர் இந்திய அணியின் ஆதரவாளராம்.  அடிவாங்கியவர் இன்சமாமை உருளைக்கிழங்கு என்று திட்டினார் என்பது பின் தெரியவந்தது.

  • 1984 ஆசியக் கோப்பைப் போட்டியின்போது நடைபெற்ற தவறு  இது.  அதிகபட்சமாக 10 ஓவர்களுக்குதான் ஒரு பந்து வீச்சாளரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  ஆனால் கணக்கில் எங்கோ தவறு நேர்ந்துவிட அப்துல் காதிர் பதினோராவது ஓவரை வீசத் தொடங்கிவிட்டார்.  இரண்டு பந்துகள் வீசப்பட்டு சந்தீப் பாட்டில் ஒரு ரன் கூட எடுத்துவிட்டார்.  அப்போது ஸ்கோரர்கள் அம்பயர்களை அழைத்து நடந்த தவறை சுட்டிக் காட்டினர்.  நீண்ட விவாதத்துக்குப் பிறகு அந்த இரண்டு பந்துகளையும் கேன்ஸல் செய்து விடுவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

  • 1996ல் நடைபெற்ற உலக கோப்பை காலிறுதிச்சுற்றில் அமீர் சோஹைல் அடுத்தடுத்து ரன்களை எடுத்து விளாசினார்.  வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தை எல்லையைத்தாண்டி அடித்தவர் அவரை நோக்கி அந்தப் பந்தை எடுத்து வருமாறு கிண்டலாக சைகை காட்டினார்.  கூடவே அதே இடத்துக்குதான் தன் அடுத்த பந்தையும் அடிப்பேன் என்பது போல சைகை காட்டினார்.  இதனால் கடுப்பான வெங்கடேஷ் பிரசாத் அடுத்த பந்திலேயே வஞ்சம் தீர்த்துக் கொண்டார்.  அந்த பந்தில் சோஹைல் ஸ்டம்புகள் தெறித்து விழுந்தன.

  • 2003 உலகக்கோப்பை போட்டியின் போது டாஸை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.  அது சரியான முடிவுதான் என்பது போல் 273 ரன்களைக் குவித்தது.  என்றாலும் சச்சின், ஷேவாக், டிராவிட், யுவ்ராஜ் போன்றவர்கள் குவித்த ரன்களால் இன்னமும் 26 பந்துகள் பாக்கி இருந்த நிலையிலேயே வெற்றி பெற்றது இந்தியா.

  • 2012 ஆசியக் கோப்பை லீக் மேட்ச்.  டாஸில் வென்ற பாகிஸ்தான் 329 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு மாபெரும் சவாலை அளித்தது.  பாகிஸ்தானி​ன் இரண்டு துவக்க ஆட்டக்காரர்களும் ஆளுக்கு 100 ரன்களைத் தாண்டி எடுத்திருந்தனர்.  இந்திய அணி ஆட ஆரம்பித்த இரண்டாவது பந்திலேயே கம்பீரின் விக்கெட் விழுந்தது.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.  ஆனால் விராட் கோலி கைகொடுத்தார். 183 ரன்களை அவர் மட்டுமே எடுத்தார்.  330 ரன்களை இந்தியா எடுத்து வெற்றிபெற்றபோது இன்னமும் 13 பந்துகள் மீதம் இருந்தன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com