IND VS BAN
IND VS BAN

இந்தியா பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்!

ஐசிசி உலககோப்பைத் தொடரின் 17வது போட்டி:

சிசி உலககோப்பையின் 17வது போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே இன்று இரண்டு மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அக்டோபர் 8ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அக்டோபர் 11ம் தேதி நடந்த ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

அதேபோல் அக்டோபர் 14ம் தேதி நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா தொடர்ந்து நல்ல ரன்கள் எடுத்து அணியையும் நன்றாக வழிநடத்தி வருகிறார்.

அதேபோல் பங்களாதேஷ் அணி இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி அக்டோபர் 7ம் தேதி நடந்த ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. அக்டோபர் 10ம் தேதி நடந்த இங்கிலாந்து உடனான போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்தது. அதேபோல் அக்டோபர் 13ம் தேதி நடந்த நியூசிலாந்துடனான போட்டியிலும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் தோல்வியையே சந்தித்தது.

ஐசிசி உலககோப்பையின் இந்த தொடரில் பங்களாதேஷ் அணியில் மெஹிடி, ஷாந்தோ, ஷகிப், மஹ்முதுல்லா,ரஹீம், லிட்டன், டொஹிட், இஸ்லாம் ஆகியோர் அணியின் பலமாக இருந்து வருகின்றனர். அதேபோல் இந்திய அணியில் கேப்டன் ரோஹித், விராட் கோலி, இஷன் கிஷன், ஹார்திக், ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் போட்டியின் போக்கிற்கு ஏற்றவாறு விளையாடுவது அணியின் பெரும்பலமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியில் 7 பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் இடதுகை பேட்ஸ்மேனாக உள்ளனர். இடதுகை பேட்ஸ்மேன்களை எதிர்க்க இந்திய அணியில் ஒரே சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மட்டுமே உள்ள நிலையில் இந்திய அணி சற்று தடுமாறும் என்றே கருதப்படுகிறது.

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்டின் படி பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். முதலில் பேட்டிங் தேர்வுசெய்பவர்களுக்கு வெற்றி விகிதம் அதிகம் என ரிப்போர்ட் கூறுகிறது.

மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் ஒரு போட்டி மட்டுமே வெற்றிபெற்று ஏழாவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணியும் எதிர்கொண்டாலும் எதிரணியின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு ஏற்றாற்போல் விளையாடினால் மட்டுமே இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com