ICC Women's T20 Cricket World Cup
ICC Women's T20 Cricket World Cup

அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா - இலங்கையை வீழ்த்திய இந்தியா!

Published on

தென் ஆப்பிரிக்கா Vs ஸ்காட்லாந்து

ஐசிசி டி20 மகளிர் உலக கோப்பை 2024 க்கான லீக் போட்டிகள் சுற்றில் அக்டோபர் 9 மதியம் 2 மணியளவில் தென்ஆப்ரிக்காவும் ஸ்காட்லாந்து அணிகளும் பங்கேற்றன. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க ஆணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியான ஆட்டத்தை துவங்கிய லாரா 27 பந்துகளில் 40 ரன்களை விளாசினார், அவருக்கு பக்க பலமாக டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி பிரிந்ததும் அடுத்து வந்த போஷ் விரைவில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் மாரிசான் கேப் விரைவாக 43 ரன்களை குவித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது.

அடுத்து பேட்டிங் இறங்கிய ஸ்காட்லாந்து அணி தொடர்ச்சியான தோல்விகள் மூலம் துவண்டு போயிருந்தது. அதை மேலும் தென் ஆப்ரிக்க அணியும் துவைத்து காயப்போட்டு விட்டது. பேட்டிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஸ்காட் அணியின் விக்கெட்டுகள் காற்றில் பறக்கும் காகிதம் போல ஒவ்வொன்றாக பறக்க ஆரம்பித்தன. இரட்டை இலக்கத்தை கூட தாண்டாமல் பல விக்கெட்டுகள் சரிந்தது. அதிக பட்சமாக பிரேசர் 14 ரன்கள் எடுத்தார். இறுதியில் 86 ரன்களுக்கு தடுமாறிய நிலையில் மொத்த விக்கட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது ஸ்காட்லாந்து. இந்த அபார வெற்றியின் மூலம் தென்ஆப்ரிக்க அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இந்தியா Vs இலங்கை

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான மற்றொரு பிரிவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 9 ஆம் தேதி இரவு 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இம்முறை களமிறங்கிய ஷஃபாலி வர்மாவுடன், ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் விளையாடினார். முதல் பத்து ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்தனர்.

அதன் பிறகு அடித்து ஆடிய ஸ்மிருதி 13வது ஓவரில் அரைசதம்(50) அடித்து பின் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஷஃபாலியும் அவுட் ஆக, அடுத்து வந்த ஜெமிமாவும் விரைவில் ஆட்டமிழந்தார். மறுபுறம் களமிறங்கிய கேப்டன் ஹர்மன் பிரித்சிங் அதிரடியாக ரன் மழை பொழிந்தார். 27 பந்துகளில் 52 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 172 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதையும் படியுங்கள்:
Ind Vs Ban: பவுலிங் செய்த 7 பேரும் விக்கெட் எடுத்த சம்பவம்… ரசிகர்கள் ஷாக்!
ICC Women's T20 Cricket World Cup

சேசிங்கை தொடங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்தே சீட்டு கட்டு போல விக்கெட்டுகளை சரிய விட்டது. முதல் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழ இலங்கை அணி தத்தளிக்க தொடங்கியது. ஸ்ரேயாங்கா பாட்டில் கேப்டன் சாமரி அட்டப்பட்டுவை வெளியேற்றினார். ஹர்ஷிதா சமரவிக்கிரம அடுத்ததாக ரேணுகா சிங் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சஞ்சீவனி மற்றும் தில்ஹாரி இணைந்து சிறிது நேரம் விளையாடியது பொறுக்கமால் ஆஷா சோபனா, சஞ்சிவினியை வெளியேற்றினார். அருந்ததி ரெட்டி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுக்க இலங்கை அணி ஆட்டம் கண்டது. இறுதியில் இலங்கை அணி 90 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஆஷா ஷோபானா ஆகியோர் ஒரேமாதிரி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப் போட்டியில் 20 வயதான ஷஃபாலி 2000 ரன்களை கடந்ததன் மூலம் 20 வயதில் 2000 ரன்களை கடந்து சாதனை செய்த முதல் பெண் ஆனார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 0.56 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com