இந்திய வீரர் பும்ராவிற்கு மீண்டும் ஒரு காயம் ஏற்பட்டால் முழு கெரியரும் க்ளோஸ் ஆகிவிடும். ஆகையால் அவர் தொடர்ந்து 2 டெஸ்ட்களில் விளையாடிவிட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஷேன் பாண்ட்.
இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு , பிஜிடி தொடரில் சிட்னி டெஸ்டின்போது காயம் காரணமாக பாதியில் விலகினார். இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சென்ற ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே ஒரு வேகப்பந்துவீச்சாளர் முதல்முறை இந்த விருதை வாங்கியுள்ளார்.
பும்ரா 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பும்ரா 2024 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் வீரர் விருது மற்றும் 2024ம் ஆண்டு சிறந்த டி20 அணியிலும் சிறந்த டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பும்ராவுக்கே சேரும். டெஸ்ட் தரவரிசையின் உலகளவில் நம்பர் 1 வீரர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பவுலிங் ஆவரேஜ் உடன் 200 விக்கெட்டை எடுத்த வீரர் என்ற பெருமையை பும்ரா படைத்திருந்தார்.
கபில்தேவுக்கு பின்னர் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் பும்ரா. ஆகமொத்தம் சென்ற ஆண்டு மட்டும் பல சாதனைகளைப் படைத்தார் பும்ரா.
ஆனால், பிஜிடி தொடரில் காயம் ஏற்பட்ட பின்னர், சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
அந்தவகையில், இது குறித்து நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் கூறுகையில், “பும்ரா குணமடைந்துவிட்டார். ஆனால், இங்கு அவரின் பணிச்சுமைதான் பிரச்சனை. இதில் மிகவும் அபாயமான ஒன்று என்றால், ஐபிஎல் தொடரிலிருந்து டெஸ்ட் போட்டிக்கு மாறுவது தான்.
ஒருநாள் போட்டி அந்த அளவுக்கு மோசம் இல்லை. காரணம், வாரத்துக்கு மூன்று நாள்கள் விளையாடுவீர்கள். பயிற்சி இருக்கும். ஏறத்தாழ 40 ஓவர்கள் வீச நேரிடும். இது டெஸ்ட் வாரத்துக்கு மிகவும் நெருக்கமான பணிச்சுமை.
ஐபிஎல் போட்டியில் வாரத்துக்கு மூன்று ஆட்டங்களில் விளையாடினால், அதில் இரு நாள்கள் பயணம் இருக்கும். ஆனால், இதிலிருந்து டெஸ்ட்க்கு மாறுவது கடினம்.
அடுத்த உலகக்கோப்பைக்கு பும்ரா மிகவும் முக்கியம். இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால், அவர் தொடர்ச்சியாக 2 போட்டிக்கு மேல் விளையாட கூடாது. அதே இடத்தில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டால், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். காரணம். அதே இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது.” என்றார்.