இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: கே.எல்.ராகுல் கேப்டன், அஸ்வினுக்கு வாய்ப்பு!

Ashwin - K L Rahul
Ashwin - K L Rahul

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக இருப்பார் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. 2022-க்கு பிறகு மீண்டும் முதன் முறையாக அஸ்வின் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் உலக கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அணியினர் விளையாடுவார்கள். ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார்.

இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் காயமடைந்த அக்ஸர் படேலுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடுவார். முதல் இரண்டு போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக இருப்பார். விராட் கோலி, ஹர்திக் பாண்டியா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷான் இப்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் ஆஸிக்கு எதிரான போட்டியில் அவர், தனது முழு திறமையை வெளிப்படுத்தி ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா 2-3 என தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை தொடரில் சிறப்பிடம் பெற்ற குல்தீப் யாதவுக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணியை வென்ற இந்திய அணி, ஆஸிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடரை வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.

இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் இலங்கை 50 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அடுத்து விளையாடிய இந்திய அணி விக்கெட் நஷ்டமின்றி வெற்றி இலக்கை எட்டியது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் செப்-22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, இந்தூர் மற்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட்கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகுர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷாமி, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

3-வது ஒருநாள் சர்வதேச போட்டிக்கான இந்திய அணியினர்:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அஸ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷாமி மற்றும்ம முகமது சிராஜ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com