சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடரில் விளையாடியது. அதில் தென்னாப்பிரிக்கா வீரர் ஒரு விதிமுறையை மீறியதாக சொல்லி ஐசிசி அபராதம் விதித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகளில் விளையாடியது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி வென்றது. இந்தத் தொடரின் நான்காவது போட்டியின்போது தென் ஆப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஜி 3 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆட்டத்தின் 15வது ஓவரில் ஜெரால்ட் கோட்ஜி வீசிய பந்துக்கு வைட் என்று கூறினார்.
அதற்கு ஜெரால்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சர்வதேச போட்டிகளின்போது நடுவரின் கருத்துக்கு எதிராக பேசுவது விதிமுறைகளை மீறுவதாகும். ஐசிசி இந்த விதிமீறலை கண்டுபிடித்தது. விதி 2.8 ஐ கோட்ஜி மீறியது கண்டறியப்பட்டு அவருக்கு இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 24 வயதான ஜெரால்ட் கோட்ஜி, அவர் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். இதனால் அவருக்கான சம்பளத்தில் அதிகபட்சமாக 50 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு 2 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதல்லவா? அதனால் என்ன ஆகும் என்று பார்ப்போமா?
மைதானத்தில் வீரர்களின் ஒழுங்கீன செயல்களைக் கண்டிக்கும் வகையில் Demerits Points உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு கிரிக்கெட் வீரர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினாலோ, ஒருவரை அடிக்கச் சென்றாலோ, செய்கையால் இன்னொரு கிரிக்கெட் வீரரை அவமரியாதை செய்தாலோ இந்த demerit points வழங்கப்படும். இந்த புள்ளிகளை 4 வகையாகப் பிரிப்பார்கள். முதலில் 1 மற்றும் 2 புள்ளிகளை சுற்று 1 ஆகவும், 3 மற்றும் 4 புள்ளிகளை சுற்று 2 ஆகவும், 5 மற்றும் 6 புள்ளிகளை சுற்று 3 ஆகவும், 7 மற்றும் 8 புள்ளிகளை சுற்று 4 ஆகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் 2 வருடங்களில் 4 புள்ளிகளை ஒரு வீரர் பெற்றுவிட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதாவது ஒரு டெஸ்ட் தொடரிலும் இரண்டு டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள்.
இதுவே இரண்டு வருடங்களில் 8 Demerit points களையும் பெற்றுவிட்டால் தண்டனையும் இரட்டிப்பாக்கப்படும். ஒரு வீரர் demerit செயல்கள் செய்வதை சுட்டிக்காட்டி புள்ளிகளைக் கொடுக்க உதவுவது நடுவரே.
இப்படியான நிலையில், ஜெரால்ட் இரண்டு புள்ளிகளைப் பெற்றுவிட்டார். இந்த 2 ஆண்டிற்குள் மீண்டும் இந்தப் புள்ளிகளைப் பெற்றுவிட்டார் என்றால், தண்டனை வழங்கப்படும்.