உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பங்கேற்ற 9 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மற்றொரு சவால் காத்திருக்கிறது. அதாவது, அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்தை சந்திக்கிறது. அரையிறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி, நிச்சயம் சவால்களை சந்தித்து வெற்றிகொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்.
பொதுவாக, இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்த போதிலும் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை யாராலும் உறுதியாக கணிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
‘இந்திய அணி முதல் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை சந்திக்கிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது அரையிறுதிப் போட்டி. எனவே, இந்தியா இன்னும் கவனமுடன் ஆடவேண்டும். எனினும், தற்போதைய நடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நினைக்கிறேன். இந்திய அணிக்கு நிர்பந்தங்களோ, சவால்களோ இல்லை என்று சொல்லிவிட முடியாது’ என்றார் ராகுல் திராவிட்.
மேலும் அவர், ‘இந்திய அணி தற்போதைய நிலையில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், பேட்ஸ்மென்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆட வேண்டுமானால் போட்டிக்கு முந்தைய பயிற்சி முக்கியமானது.
இதுவரையிலான போட்டிகளில் இந்தியா நிர்பந்தங்களை சந்தித்து வந்துள்ளது. எனவே, இந்திய அணி சிறப்பாகவே செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி ஏதும் தேவையில்லை. வழக்கமான பயிற்சியே போதுமானது. தற்போதைய சூழலில் பேட்ஸ்மென்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்தி ஆடினாலே போதுமானதாக இருக்கும்’ என்றார் திராவிட்.
‘வழக்கமான பயிற்சியுடன், நன்கு திட்டமிட்டு நம்பிக்கையுடன் செயலாற்றினாலே நியூஸிலாந்தை வெற்றி பெற்று விடலாம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக ஆட வேண்டும். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் நம்பிக்கை அளிக்கிறது’ என்றும் அவர் கூறி உள்ளார்.