

இந்திய அணி தனது அயர்லாந்து சுற்றுலாவை தொடர்ந்து, இங்கிலாந்திலும் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் படுதோல்வியை அடைந்தது. இதற்கு முன்னர் இந்திய அணி, இவ்வளவு மோசமானதாக அதன் செயல்பாடுகள் இருந்தது இல்லை. தொடர்ச்சியாக 6 டி 20 போட்டிகளில் தோல்வியுற்ற சாதனையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். கவுதம் கம்பீரின் பயிற்சியில் இந்திய அணி வரலாற்றில் தனது மோசமான நிலையை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர், கிரேக் சேப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி இது போன்ற ஒரு மோசமான கட்டத்தில் இருந்தது.
வழக்கமாக தொடரை வென்ற அணிகள் இறுதிப் போட்டியில் அலட்சியமாகவே விளையாடும். அதனால் , தொடரில் தோல்வியுற்ற அணி இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று ஆறுதல் அடையும். ஆனால் , இங்கிலாந்தில் அது போன்ற சூழ்நிலையும் இல்லை. அவர்கள் முக்கியத்துவம் இல்லாத இறுதிப் போட்டியில் கூட பொறுப்பாக விளையாடி தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் வரலாறு படைத்துள்ளனர்.
இந்திய அணி 3 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் 5 வது போட்டி தி ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்தியா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்றார். இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். அவர்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் வெற்றி பெறப் போவது என்னவோ? அவர்கள் தான், என்று கேப்டன் முன்கூட்டியே நம்பினார் போலும்.
முதலில் பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களை புரட்டி புரட்டி எடுத்தது. ஜோஸ் பட்லரும் ஹாரி புருக்கும் இணைந்து இந்திய அணிக்கு பேரழிவை ஏற்படுத்தினர். இந்த இருவர் அணியும் தலா 8 சிக்சர்களை அடித்து மேட்ச் முழுக்க வானவேடிக்கை காட்டினார்கள். 64 பந்துகளில் பட்லர் 131 ரன்களை குவித்து மிரட்டினார். மறு புறம் ஹாரி புரூக் 45 பந்துகளில் 95 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 257 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி எந்த ஒரு நம்பிக்கையும் தரவில்லை. இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக சஞ்சு சாம்சனை இந்திய அணி களம் இறக்கியது. பெரிதாக ஓட்டை விழுந்த கப்பலை, சிறிய எம்சீல் வைத்து ஓட்ட நினைத்த கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரின் எண்ணம் ஈடேறவில்லை. 27 ரன்களில் சாம்சன் நடையைக் காட்டினார் , இஷான் கிஷன் (56) மற்றும் திலக் வர்மா (53) ஆகியோர் அரை சதம் அடித்து அணி ஓரளவிற்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.
அதன் பின்னர் வந்தவர்கள் ரன்களைக் குவிக்க திணறியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 201/8 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. சஞ்சு சம்சன் மற்றும் வைபவ் ஆகியோரை மாற்றி மாற்றி உட்கார வைக்கும் யோசனையை இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கவாஸ்கர் , முகமது கைப் போன்றவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்தனர். தொடர்ச்சியாக இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதால் , இந்திய கிரிக்கெட் வாரியம் அணி நாடு திரும்பியதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.