

ராஞ்சியில் , இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று (நவ.30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரம் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் , முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததால் , இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருந்தது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஆனால் , அடுத்து களமிறங்கிய வீராட் கோலி நின்று நிதானமாக தென் ஆப்பிரிக்க அணியின் பந்துக்களை நாலா பக்கமும் சிதறடித்தார். மறுபுறம் ஹிட்மேன் ரோஹித்தும் சிறப்பான ஒத்துழைப்பை கோலிக்கு கொடுத்தார்.இந்த போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை இணைந்து விளையாடிய சாதனையை ரோகித் சர்மா - விராட் ஆகியோர் படைத்துள்ளனர்.
மூன்று சிக்ஸர்களை பறக்க விட்ட ரோஹித்(57) அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் , சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள்( 352) அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா முதலிடம் பெற்றார்.அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி சோர்வுற்ற நேரம் கேப்டன் கே.எல்.ராகுல் பூஸ்ட் போல வந்தார்.
விராட் கோலி 7 சிக்சர்கள் 4 பவுண்டரிகளை அடித்து அதிரடியாக 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையான, ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி மிஞ்சினார். 52 சதங்களுடன் பட்டியலில் முதல் இடத்தை விராட் கோலி பிடித்தார். 51 சதங்களுடன் சச்சின் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் (60) அரை சதமடித்து , ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து அணியின் ஸ்கோர் 300 ஐ கடக்க உதவினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349/8 ஸ்கோரை எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பாக மார்கோ ஜான்சன் , நன்ட்ரே பர்க்கர், கார்பின் பாஷ் , ஓட்நீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
350 ரன்களை இலக்காக துரத்திய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஆரம்பம் மோசமாக இருந்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் 7 ரன்களில் அவுட்டாகி வெளியேற , அடுத்த இரு விக்கட்டுகள் டக் அவுட் ஆகி வெளியேறினர். இந்நிலையில் மாத்யூ பிரிட்ஸ்கி(72) , டோனி டி சோர்சி(39) இணைந்து அணியினை மீட்டனர். அடுத்தடுத்து பேட்டிங் செய்தவர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும் போல இருந்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் பவுலர்கள் எல்லாம் பேட்டிங்கிலும் விளாசி எடுத்தனர். மார்க்கோ ஜென்சன் 39 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார், கார்பின் பாஷ் 67 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 49.2 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி, 332 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற்றது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் சிறப்பான முறையில் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சாதனை சதமடித்த வீராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெறுகிறது. இந்த தொடரின் அடுத்த போட்டி ராய்ப்பூரில் டிசம்பர் 3 அன்று நடைபெற உள்ளது.