
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய அணி ICC WTC 2021-23 புள்ளி விவரப் பட்டியலில் ஏற்கெனேவே 2வது இடத்தில் இருந்துவந்தது. இருந்தாலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவது கேள்விக்குறியாகவே இருந்துவந்தது.
அதற்குக் காரணம், புள்ளிப் பட்டியலில் 4ம் இடத்தில் இருந்த இலங்கை அணிக்கு இன்னும் டெஸ்ட் தொடர் மீதமிருந்ததால், அதில் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி 2ம் இடத்திற்கு முன்னேறி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
அதேசமயம், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் தென்னாப்பிரிக்கா இருந்தாலும், தென்னாப்பிரிக்காவிற்கு வேறு டெஸ்ட் போட்டிகள் ஏதும் இல்லை. அதனால் அந்த அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்றுவந்த இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இலங்கை அணி ஜெயிப்பதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருந்தது.
இருந்தாலும் நியூசிலாந்து அணி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கடைசி பந்தில் தனது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்தது.
மறுமுனையில், இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் போட்டியானது இன்று டிராவில் முடிந்தாலும், நியூசிலாந்தின் இந்த வெற்றியால் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும், ஐசிசி உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது, ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் மாதம் 07-11 ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.