
நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல சாதனைகள் படைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி கொண்டே வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஜூனியர் மகளிர் அணி தொடர்ந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சமீப காலமாக கிரிக்கெட்டில் ஆண்கள் அணி மட்டுமல்ல பெண்கள் அணியும் சாதனைகளை படைத்து வருகிறது.
2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் சூப்பர் 6 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஜனவரி 28-ம்தேதி கோலாலம்பூரில் நடந்த கடைசி ஆட்டத்தில் 150 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை பந்தாடி மெகா வெற்றி பெற்றது.
இந்நிலையில் கோலாலம்பூரில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அணி ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜெமிமா பென்ஸ், ருடி ஜான்சன் இருவரும் உடனே ஆட்டம் இழக்க, டேவினா பெர்ரினும், கேப்டன் அபி நோர்குரோவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனாலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் சுருண்டது. இந்திய தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் பருனிகா சிசோடியா, வைஷ்ணவி ஷர்மா தலா 3 விக்கெட்டும், ஆயுஷி சுக்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 114 ரன் இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது இந்தியா அணி. கமலினியும், கோங்காடி திரிஷாவும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் திரட்டி வலுவான அடித்தளமிட்டதுடன், கமலினி நிலைத்து நின்று விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல உதவினார். இதன் மூலம் இந்திய அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பருனிகா சிசோடியா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் நிக்கி பிரசாத் கூறுகையில், ஒரு கேப்டனாக அணியைப் பற்றி பெருமைப்படுவதாகவும், அவர்கள் அனைவருக்கும் இது ஒரு சிறப்பு தருணம் என்றும் கோப்பைக்கு ஒரு படி நெருக்கமாக இருப்பதாகவும் கூறினார்.
இதே மைதானத்தில் (கோலாலம்பூர்) நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வரும் இந்திய அணி இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து வெற்றிக்கோப்பையை ருசிக்குமா என்று பார்க்கலாம்.