உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிவாகை சூடிய இந்திய அணி, ஏறக்குறைய 40 இரவுகள் யாரும் அசைக்க முடியாத அணியாகவே இருந்தது. ஆனால், 41-வது நாளில் அதே ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இதை ஆஸ்திரேலியாவுக்கு நல்லநேரம் என்றும் சொல்லலாம் அல்லது இந்தியாவுக்கு கெட்ட நேரம் என்றும் சொல்லலாம்.
இனி வரும் நாட்களில் இந்தியாவின் தோல்விக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். ஒவ்வொரு முறை உலக கோப்பை போட்டி நடக்கும்போதும் இந்திய அணி இறுதிநிலையை எட்டினாலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்டுவிடுகிறது. இதற்கு சரியான திட்டமிடுதல் இல்லாததுதான் காரணம்.
ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டு செயல்பட்டதே அதன் வெற்றிக்கு காரணம். உதாரணமாக டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின், சரியான முடிவு எடுத்து முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். வழக்கமான நடைமுறைக்கு மாறாக அணியின் பலத்தையும் நம்பிக்கையையும் வைத்து முடிவு எடுத்தார். வேகப்பந்துவீச்சுக்கு பெயர்போன ஆடுகளத்திலேயே பயிற்சிபெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஆமதாபாதில் ஸ்லோ பிட்சிலும் விளையாடத் தயாரானார்கள்.
ஆமதாபாதில் மெதுவான ஆடுகளத்தை தேர்ந்தெடுத்தது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்தான். எனவே தோல்விக்கு ஆடுகளத்தை குறைசொல்ல முடியாது. மேலும் இதே ஆடுகளத்தில்தான் கடந்த மாதம் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது.
ஆஸ்திரேலிய அணி இந்திய அணி வீரர்களுக்கு தகுந்தார் போல் பந்துவீசியது. பீல்டிங்கிலும் வீரர்களையும் அவ்வப்போது இடமாற்றிக்கொண்டே வந்தது. எல்லாவற்றையும் வீட பந்து பவுண்டரிக்கு சென்றுவிடக்கூடாது என்பதிலும், கேட்சை தவறவிட்டுவிடக்கூடாது என்பதிலும் குறியாக இருந்தனர்.
மேலும் ஆஸ்திரேலிய அணியினர் ஆமதபாத் ஆடுகளத்தை உன்னிப்பாக கவனித்து வந்தனர். வேகப்பந்துவீச்சு பலன் கொடுக்குமா அல்லது சுழற்பந்துவீச்சுதான் சரிவருமா என்பதை ஆய்வு செய்தனர். இதற்கு முன் அங்கு விளையாடிய அணிகளின் ஆட்டத்தை உற்று கவனித்து அதன் படி செயல்பட்டனர்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வேகமாக பந்துவீசாமல், மெதுவான, வழக்கமான பவுன்சர்களையே வீசினர். ஆடுகளம் மெதுவானதான இருந்தபோதிலும் அதற்கு ஏற்றவாறு பந்துகளை வீசினர்.
பீல்டர்களும் பொறுப்புடன் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். பந்தை சரியாக தடுத்து நிறுத்தி அதை விக்கெட் கீப்பர் கைக்கு செல்லும் வகையில் திருப்பி அனுப்பினர்.
இந்திய அணியில் முகமது ஷமி, சிராஜ் இருவரும் சீமர்கள் போட்டு ஆஸ்திரேய பேட்ஸ்மென்களை பயமுறுத்தினர். அதற்கு பலன் இருந்தது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் விரைவிலேயே அவுட்டானார்கள். பும்ரோ போட்ட ஆஃப் கட்டர் பந்துவீச்சில் ஸ்மித் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆனால், அதன் பிறகுதான் ஆஸ்திரேலிய அணியினரினர் ஆட்டத்தில் சூடுபிடித்தது. மெதுவான ஆடுகளத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க தயாரானார்கள். டிராவிஸ் ஹெட் நிர்பந்தங்களைக் கடந்து மன உறுதியுடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
மொத்தத்தில் இந்திய அணியினர் நாக்அவுட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய போதிலும், இறுதிப் போட்டியில் திட்டமிட்டு செயல்படாததும், மெதுவான ஆடுகளத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்த தவறியதும்தான் தோல்விக்கு காரணம் என்று நிச்சயமா சொல்லலாம்.
அடுத்த உலக கோப்பையில் இந்தியா வெற்றிபெற இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.