IPL தொடருக்குப் பின்னர் ஆரம்பமாகும் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ப்ரெட் லீ தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஜூன் 2ம் தேதி முதல் டி20 உலககோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மோதவுள்ளன. இந்தியா ஜூன் 5ம் தேதி ஐயர்லாந்துடன் தனது முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. 20 அணிகள் மோதும் இந்தத் தொடர், ஜூன் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உலககோப்பை தொடர் முழுவதும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ப்ரெட் லீ கூறியதாவது, “ஐசிசி ஐம்பது ஓவர் கொண்ட உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததால், இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 20 ஓவர் கொண்ட போட்டியை பொறுத்தவரை இந்திய அணியே எப்போதும் பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது.
இந்திய அணி வீரர்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடுவார்கள். ஐபிஎல் போட்டிகளை அடுத்து, ரோஹித் மற்றும் ஹார்திக் ஆகியோர் உலககோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இந்திய வீரர்களின் தந்திரம் மற்றும் திறமை ஆகியவை அவர்களைக் கட்டாயம் வெற்றிபெற வைக்கும்.” என்று பேசினார்.
இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக வெற்றிபெற்றது. அதேபோல், 2014ம் ஆண்டு பங்களாதேஷ் நடத்திய டி20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி இறுதி போட்டியில் களமிறங்கியது. ஆனால், இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோல்வியடைய செய்தது. அதன்பின்னர் இந்தியா இறுதிபோட்டிகளில் களமிறங்காதது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.